அத்தியாவசிய மருந்து பொருட்கள் இல்லாமல் நாட்டில் பதிவாகும் மரணங்களுக்கும், நாட்டு மக்கள் எதிர்க்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலைமைக்கும் நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷ பொறுப்புக்கூற வேண்டும். மூன்றில் இரண்டு பெரும்பான்மை மக்களாணையை பஷில் ராஜபக்ஷ விமர்சனத்திற்குள்ளாக்கி விட்டார் என முன்னாள் வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார்.
என்.எம். பெரேரா நிலையத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
எரிபொருள், எரிவாயு சிலிண்டர் மற்றும் மருந்து பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை பெற்றுக்கொள்வதற்காக நாட்டு மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பெரும் அசௌகரியங்களை எதிர்க்கொள்கிறார்கள். நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷவின் தவறான நிதி முகாமைத்துவத்தினால் நாட்டு மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
கடந்த வருடம் இறக்குமதி செலவு 20.1பில்லியன் டொலர்களாக காணப்பட்டது.எரிபொருள் நிலக்கரி,எரிவாயு மற்றும் மருந்து பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருள் இறக்குமதிக்கு மாத்திரம் கடந்த ஆண்டு 4.6 பில்லியன் டொலர் நிதி செலவிடப்பட்டுள்ளது.அத்தியாவசியமற்ற பொருள் இறக்குமதிக்கு மாத்திரம் 6 பில்லியன் டொலர் செலவிடப்பட்டுள்ளது.
வெளிநாட்டு கையிருப்பு வரையறுக்கப்பட்டுள்ள நிலையில் அத்தியாவசியமற்ற பொருள் இறக்குமதியை தற்காலிகமாக மட்டுப்படுத்துமாறு அமைச்சரவையிலும்,நிதியமைச்சருடனும் பலமுறை அறிவுறுத்தினோம். அத்தியாவசிய பொருள் இறக்குமதிக்கு மாத்திரம் முன்னுரிமை வழங்குமாறு நிதியமைச்சிடம் முன்வைத்த கோரிக்கை குறித்து அவர் அவதானம் செலுத்தவில்லை.
அத்தியாவசியமற்ற பொருள் இறக்குமதியை மட்டுப்படுத்த அமைச்சரவை முன்னெடுத்த தீர்மானத்தை நிதியமைச்சர் செயற்படுத்தவில்லை. மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் 2021.10.01ஆம் திகதி பொருளாதார மீட்சிக்கான ஆறுமாத கொள்கை திட்டத்தை முன்வைத்தார். மத்திய வங்கி முன்வைத்த 6மாத கொள்கை திட்டத்தை நிதியமைச்சர் இதுவரையில் அமைச்சரவையில் சமர்ப்பிக்கவில்லை. நாட்டின் பொருளாதாரத்தை வேண்டுமென்றே நிதியமைச்சர் பாதிப்பிற்குள்ளாக்குகிறார்.
ரூபாவின் வீழ்ச்சியை கட்டுப்படுத்துவதற்காக கடந்த ஒருவருட காலமாக வலுக்கட்டாய முறையில் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகள் எரிபொருள் அதிகரிப்பிற்கு பிரதான காரணியாக அமைகிறது. கறுப்பு பண சந்தையினை நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷ முழுமையாக ஆதரிக்கிறார். மத்திய கிழக்காசிய நாடுகளில் உள்ளவர்கள் கறுப்பு சந்தை ஊடாக பணபரிமாற்றலில் ஈடுப்படுவதால் வங்கி கட்டமைக்கு வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.
பொருளாதார பாதிப்பில் இருந்து மீள்வது குறித்து நிதியமைச்சர் அக்கறை கொள்ளவில்லை. பொருளாதாரத்தை திட்டமிட்டு மென்மேலும் பாதிப்பிற்குள்ளாக்குகிறார். மருந்து பொருட்கள் இல்லாமல் நாட்டில் பதிவாகும் மரணங்களுக்கு நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷ பொறுப்புக்கூற வேண்டும் என்றார்.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – யூடியூப் YouTube | [email protected]