தமிழ் மக்களின் அரசியல் தீர்வு விடயத்தில் அரை நூற்றாண்டுகாலமாக அக்கறை செலுத்தி வருகின்றோம். தீர்வுக்கான நகர்வுகளில் சர்வதேச ரீதியிலும் தேசிய ரீதியிலும் தொடர்ச்சியான முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்ற கட்சி என்ற ரீதியில் முழு ஆயத்தத்துடனேயே எமது பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
அரசியல் தீர்வு விடயத்தில் ஜனாதிபதியுடன் மட்டுமல்ல சகல தரப்புடனும் எந்த நேரத்திலும் பேச்சுவார்த்தை நடத்த நாம் தயாராகவே உள்ளோம் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் தெரிவித்தார்.
ஜனாதிபதியுடன் தமிழ் தேசிய கூட்டமைப்பு முன்னெடுக்கவுள்ள பேச்சுவார்த்தை தொடர்பில் கூட்டமைப்பின் பாராளுமன்ற குழுக்கூட்டத்தின் போது சம்பந்தன் தெளிவுபடுத்தியிருந்தார்.
இதன்போது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் நடைபெறவிருந்த சந்திப்பில் கலந்துரையாட வேண்டிய விடயங்கள் குறித்து சம்பந்தன் கூட்டமைப்பின் உறுப்பினர்களிடத்தில் எடுத்துக்கூறியுள்ளார்.
இந்நிலையில் ஜனாதிபதியை சந்திக்க முன்னர் அவருடன் பேசவுள்ள விடயங்களை கடிதம் மூலம் தெரியப்படுத்தலாம், அதற்கு ஜனாதிபதி வழங்கும் பதிலைப்பொருத்து ஜனாதிபதியை சந்திப்பதா இல்லையா என்பது குறித்து ஆராயலாம்.
எந்தவித முன் ஆயத்தமும் இல்லாது ஜனாதிபதியை சந்திப்பதில் அர்த்தமில்லை என டெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனிடத்தில் வலியுறுத்தியுள்ள நிலையில், அது குறித்து தமிழ் தேசிய கூட்டமைப்பின் கருத்தினை கேசரிக்கு தெரிவிக்கும் போதே சம்பந்தன் இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
தமிழ் மக்களின் அரசியல் தீர்வு விடயத்தில் ஜனாதிபதியுடனோ அல்லது வேறு எந்த தரப்புடனும் எந்த நேரத்திலும் பேச்சுவார்த்தை நடத்த தமிழ் தேசிய கூட்டமைப்பு தயாராகவே உள்ளது.
அரை நூன்றாண்டு காலமாக தமிழ் மக்களின் அரசியல் தீர்வு விடயங்களில் முழு மனதுடன் ஈடுபடும் கட்சியாக நாம் சகல சந்தர்ப்பங்களிலும் எமக்கு கிடைக்கும் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக்கொள்ளவே நினைக்கின்றோம்.
இலங்கையில் ஆட்சியில் இருந்த அரசாங்கங்களிடமும், சர்வதேசத்திடமும் தொடர்ச்சியாக எமது நிலைப்பாடுகளை சரியாக முன்வைத்து வந்துள்ளோம். இது தமிழர் தரப்புக்கும் நன்றாக தெரியும்.
அவ்வாறு இருந்தும் முன் ஆயத்தம் இல்லாது தமிழ் தேசிய கூட்டமைப்பு ஜனாதிபதியை சந்திக்க நினைப்பது தவறென்ற விதத்தில் ஒரு சிலர் கருத்துக்களை கூறியுள்ளனர்.
வீரகேசரி தேசிய பத்திரிகையில் அவர்களின் நிலைப்பாடு வெளியிடப்பட்டுள்ளது. ஆனால் இது முற்றிலும் தவறாக கருத்தாகும்.
தமிழ் தேசிய கூட்டமைப்பு எப்போதுமே முழு ஆயத்தத்துடன், தமிழர் அரசியல் தீர்வு விடயங்களில் எமது நிலைப்பாடு என்ன என்பதை முன்னிறுத்தியே எந்த தரப்புடனும் பேச்சுவார்த்தைக்கு செல்லும் என்பதை விளங்கிக்கொள்ள வேண்டும்.
ஜனாதிபதியுடன் நாம் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பது எவரேனும் ஒரு கட்சிக்கு பிடிக்கவில்லை என்றால், அவர்களுக்கு பேச்சுவார்த்தைகளில் ஈடுபட விருப்பம் இல்லை என்றால் அவர்கள் தாராளமாக தீர்மானம் எடுக்க முடியும்.
கூட்டமைப்பில் சகல பங்காளிக்கட்சிகளுக்கும் அந்த உரிமை உள்ளது. அதனை நாம் எப்போதுமே தடுத்ததும் இல்லை. ஆனால் அவர்கள் பேச்சுவார்த்தைக்கு வரவில்லை என்பதற்காக ஆயத்தம் இல்லாது பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கின்றோம் என எம்மை விமர்சிக்க முடியாது. அதனை தமிழ் தேசிய கூட்டமைப்பு கண்டிக்கின்றது என்றார்.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – யூடியூப் YouTube | [email protected]