உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுக்களை ஏற்றுக் கொள்ள முடியாது. நல்லாட்சி அரசாங்கத்தைப் போன்று இலங்கையை மீண்டும் சர்வதேசத்திடம் காட்டிக் கொடுக்க நாம் தயாராக இல்லை என்று வெளிநாட்டலுவலகள் அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார்.
ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் மிச்செல் பச்லெட் இலங்கை தொடர்பில் சமர்ப்பித்துள்ள அறிக்கையில் 85 சதவீதமானவை இலங்கையின் உள்ளக விவகாரங்களுடன் தொடர்புடையவையாகும்.
இலங்கை ஐ.நா.வின் அங்கத்துவ நாடாகவுள்ளது என்பதற்காக உள்ளக விவகாரங்களில் தலையிடும் உரிமை அதற்கு கிடையாது என்றும் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் சுட்டிக்காட்டினார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 49 ஆவது கூட்டத்தொடர் தொடர்பில் தெளிவுபடுத்தும் ஊடகவியலாளர் மாநாடு நேற்று புதன்கிழமை அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்றது. இதன் போது கருத்து வெளியிடுகையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில் ,
இம்முறை ஐ.நா. கூட்டத்தொடர் இலங்கைக்கு பாரிய வெற்றி மிக்கதாகவே அமைந்தது. ஐ.நா.வில் இலங்கை முன்வைத்த நிலைப்பாட்டினை 45 அங்கத்துவ நாடுகளில் 32 நாடுகள் ஏற்றுக் கொண்டன. எவ்வாறிருப்பினும் முழு உலகமும் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ள நிலையில் 6 மாதங்களுக்கொரு முறை இலங்கை குறித்த அறிக்கையை முன்வைத்து அதன் மீது வாக்கெடுப்புக்கள் நடத்தப்படுவது மாத்திரம் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இலங்கைக்கு எதிராக ஏன் இவ்வாறான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன?
மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் இலங்கை தொடர்பில் முன்வைத்துள்ள அறிக்கையில் 85 சதவீதமானவை உள்ளக விவகாரங்களுடன் தொடர்புடையவையாகும். அவரால் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் எந்த வகையிலும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் விடயதானங்களுக்கு உட்பட்டவையல்ல.
காரணம் அதில் அரச நியமனங்கள் , அமைச்சர்கள் மற்றும் அமைச்சுக்களின் செயலாளர் நியமனம் , ஆளுனர்களின் நியமனம் , மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கான அதிகாரங்கள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.
உண்மையில் இவற்றுக்கும் ஐக்கிய நாடுகள் சபைக்கும் உள்ள தொடர்பு என்ன? இவ்வாறான விடயங்களில் தலையிடுவதற்கு ஐ.நா.விற்கு எவ்வித சட்ட ரீதியான உரிமையும் கிடையாது. அத்தோடு ஐ.நா.வில் அறிக்கையை சமர்ப்பிப்பதாயின் அங்கத்துவ நாடுகள் சகலவற்றையும் அந்த செயற்பாட்டில் உள்ளடக்க வேண்டும்.
ஆனால் அவ்வாறு எதுவும் இடம்பெறுவதில்லை. மாறாக இலங்கை தொடர்பான விசாரணைகளும் , அறிக்கைகளை சமர்ப்பித்தலும் மாத்திரமே இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன.
ஐ.நா. அதன் அங்கத்துவ நாடுகள் அனைத்தையும் ஒரே கண்ணோட்டத்திலேயே நோக்க வேண்டும். அனைத்து நாடுகளினதும் இறையான்மைக்கு மதிப்பளிக்க வேண்டும். ஆனால் இலங்கை விவகாரத்தில் பாகுபாடு காண்பிக்கப்படுகிறது. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் மிச்செல் பச்லெட்டின் கீழ் இலங்கை தொடர்பான விசாரணைகளை முன்னெடுப்பதற்கு நியமிக்கப்பட்டுள்ள அலுவலகத்திற்கு பல மில்லியன் நிதி செலவிடப்படுகிறது.
கொவிட் அச்சுறுத்தலிலிருந்து மீள்வதற்கு ஒரு தடுப்பூசியைக் கூட வழங்க முடியாத நாடுகள் கூட உலகில் உள்ள இந்த சந்தர்ப்பத்தில் எதற்காக இலங்கையை இலக்காகக் கொண்டு இவ்வாறான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன?
இவற்றின் இறுதி பிரதி பலன் என்ன? 6 மாதங்களுக்கு ஒரு முறை எந்த நாடு எந்த நாட்டுக்கு எதிராகவுள்ளது என்பதை வெளிப்படுத்தி நாடுகளுக்கிடையில் பிளவுகளை ஏற்படுத்துவது மாத்திரமேயாகும். இலங்கையை மாத்திரம் இலக்காகக் கொண்டு முன்னெடுக்கப்படும் இந்த திட்டமிட்ட செயற்பாட்டை ஏற்றுக் கொள்ள முடியாது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான வழக்கு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இது தொடர்பில் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் என்ன என்பதை விரைவில் நாட்டு மக்களுக்கு வெளிப்படுத்துவோம். ஐ.நா.வையும் , ஏனைய சர்வதேச நாடுகளையும் திருப்திப்படுத்துவதற்காக நாட்டைக் காட்டிக்கொடுக்க முடியாது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பிலும் , சட்டமா அதிபர் தொடர்பிலும் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை ஏற்றுக் கொள்ள முடியாது. இந்த விவகாரத்தில் உள்ளக விசாரணைகள் ஊடாக தீர்வு காண முடியும்.
முப்படையினருக்கு எதிராக நல்லாட்சி அரசாங்கம் இலங்கையை சர்வதேசத்திடம் காட்டிக் கொடுத்தமையின் காரணமாகவே மக்கள் அந்த ஆட்சியை புறக்கணித்தனர். அதே தவறை மீண்டும் செய்வதற்கு நாம் தயாராக இல்லை என்றார்.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – யூடியூப் YouTube | [email protected]