நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷவிற்கும் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்குமிடையிலான சந்திப்பு இன்று புதுடெல்லியில் இடம்பெற்றது.
இருநாள் உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டு நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷ, நிதியமைச்சின் செயலாளர் எஸ்.ஆர் ஆடிகல ஆகியோர் நேற்றைய தினம் இந்தியாவிற்கு பயணமாகினர்.
இந்தியாவிடமிருந்து இலங்கைக்கு கிடைக்கப்பெறும் கடன் நிவாரண நிதியுதவி தொடர்பான ஒப்பந்தங்களை நிறைவு செய்துகொள்ளும் நோக்கில் நிதியமைச்சர் இந்தியாவிற்கு உத்தியோகபூர்வமான விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.
இந்நிலையிலேயே நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷவிற்கும் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்குமிடையிலான சந்திப்பு இன்று புதுடெல்லியில் இடம்பெற்றுள்ளது.
நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷ கடந்த டிசெம்பர் மாதம் இந்தியாவிற்கு உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டிருந்தார்.
எரிபொருள், அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மற்றும் மருந்துப் பொருட்கள் ஆகிய அத்தியாவசிய தேவைகளுக்காக இந்தியா இலங்கைக்கு 2.1 பில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இரு நாடுகளுக்குமிடையிலான குறுகிய மற்றும் நடுத்தர திட்டங்களை செயற்படுத்தும் முறைமையை இலகுபடுத்தல் வழிமுறைகள் குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டன.
இந்தியாவில் இருந்து இலங்கைக்கு உணவு, மருந்து உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்யும் வகையில் கடன்வரி நீடிப்பை கருத்திற்கொண்டு அவசர உணவு மற்றும் சுகாதார சேவைத்திட்டம் எரிபொருள் இறக்குமதி செய்யும் எரிசக்தி பாதுகாப்பு திட்டம், திருகோணமலை எண்ணெய் தாங்கிகளை நவீனமயப்படுத்தல்.
நடைமுறையில் உள்ள நிலுவைத் தொகை சிக்கல்களை தீர்ப்பதற்காக இலங்கைக்கு உதவுவதற்கு நாணய பரிமாற்றத்தின் ஊடாக சலுகை வழங்கல் மற்றும் பொருளாதார முன்னேற்றம், தொழில்வாய்ப்பை விரிவுபடுத்தும் வகையில் இலங்கையில் பல்வேறு துறைகளில் இந்திய முதலீடுகளை இலகுபடுத்தல் ஆகிய விடயங்கள் குறித்து ஆராயப்பட்டன. அவை குறுகிய மற்றும் நடுத்தர கால ஒத்துழைப்பிற்கான தூண்கள் என கருதப்படுகிறது.
எரிபொருள் கொள்வனவிற்காக இந்தியா கடந்த மாதம் இலங்கைக்கு 500 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கியது. இலங்கை இந்தியாவிடமிருந்து மேலும் ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்களை பெற்றுக்கொள்ள எதிர்பார்த்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – யூடியூப் YouTube | [email protected]