கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைகள் நேற்றுடன் நிறைவடைந்துள்ள நிலையில் , திங்கட்கிழமை (7) முதல் 2021 ஆம் ஆண்டுக்கான மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகள் ஆரம்பமாகவுள்ளன.
அதற்கமைய நாடளாவிய ரீதியிலுள்ள சகல பாடசாலைகளும் திங்கட்கிழமை (7) ஆரம்பமாகவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
கடந்த பெப்ரவரி 7 ஆம் திகதி 2021 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைகள் ஆரம்பமாகின.
இதன் காரணமாக நாடளாவிய ரீதியிலுள்ள சகல பாடசாலைகளுக்கும் பெப்ரவரி 3 ஆம் திகதி முதல் விடுமுறை வழங்கப்பட்டிருந்தது. சுமார் ஒரு மாத காலத்திற்கு பின்னர் மீண்டும் பாடசாலைகள் ஆரம்பமாகவுள்ளன.
இதனைத் தொடர்ந்து நாடளாவிய ரீதியிலுள்ள தமிழ் மற்றும் சிங்கள பாடசாலைகளுக்கு மாத்திரம் ஏப்ரல் 8 ஆம் திகதி விடுமுறை வழங்கப்பட்டு 18 ஆம் திகதி பாடசாலைகள் மீள ஆரம்பிக்கப்படும் என்றும் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
அத்தோடு கல்விப் பொதுத் தராதர சாதாரணதர பரீட்சைகள் மே மாதம் 23 ஆம் திகதி முதல் ஜூன் முதலாம் திகதி வரை இடம்பெறவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும் நாடளாவிய ரீதியிலுள்ள இஸ்லாம் பாடசாலைகளுக்கு ஏப்ரல் முதலாம் திகதி விடுமுறை வழங்கப்பட்டு மே மாதம் 4 ஆம் திகதி பாடசாலைகள் மீள ஆரம்பிக்கப்படும் கல்வி அமைச்சினால் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ள சுற்று நிரூபத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த சுற்று நிரூபத்தில் 2021 ஆம் ஆண்டு சாதாரண தர மாணவர்களுக்கான கல்வி ஆண்டு 2022 ஏப்ரல் 18 ஆம் திகதி நிறைவடைவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாண்டுக்கான தவணை விடுமுறைகள் தொடர்பில் எதிர்வரும் வாரங்களில் அறிவிக்கப்படும். இந்த விடுமுறைகள் தொடர்பில் கல்வி அமைச்சரால் எடுக்கப்படும் தீர்மானங்களே இறுதியானவை என்று சுற்று நிரூபத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]