உக்ரைன் மீது ரஷ்யா கடந்த 24 ஆம் திகதி போர் தொடுத்து இன்று 10 ஆவது நாளாகவும் தொடர்ந்து இடம்பெற்று வருகின்ற நிலையில், ஒவ்வொரு நாளும் உக்ரைனின் முக்கிய நகரங்கள் மீது தரை, வான், கடல் என மும்முனை தாக்குதல்களை தீவிரப்படுத்தி வருகிறது.
இந்நிலையில், ரஷ்ய படையினரின் தொடர் ஏவுகணை வீச்சு, ஷெல் வீச்சு, பீரங்கித் தாக்குதல்கள் மற்றும் சரமாரியான துப்பாக்கி வேட்டுக்களால் உக்ரைன் உருக்குலைந்து சின்னாபின்னமாகி வருகிறது.
ரஷ்யாவை உலக நாடுகள் தனிமைப்படுத்தினாலும் ரஷ்யா அதனை கண்டுகொள்ளாமல் தனது தாக்குதல்களை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.
10 இலட்சத்திற்கு மேற்பட்டோர் அயல் நாடுகளுக்கு இடம்பெயர்ந்துள்ள நிலையில், இன்னும் 40 இலட்சம் பேர் அங்கிருந்து வெளியேறுவார்கள் என்று ஐரோப்பிய யூனியன் கணித்துள்ளது.
ரஷ்ய படையினர் உக்ரைனின் பெரிய நகரங்களில் கெர்சன் நகரை மட்டுமே கைப்பற்றியுள்ள நிலையில் ஏனைய நகரங்களையும் கைப்பற்ற தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன.
உக்ரைன் நாட்டில் தான் ஐரோப்பாவின் மிகப்பெரிய அணுமின் நிலையம் என்று சொல்லப்படுகிற சபோரிஜியா அணுமின் நிலையத்தையும் நேற்று ரஷ்ய படைகள் கைப்பற்றின.
உக்ரைன் மீது நடத்தப்படும் ரஷ்யாவின் தாக்குதல் 10 ஆவது நாளை எட்டியுள்ளது.
உக்ரைனின் 2 ஆவது பெரிய நகரமான கார்கிவ் நகரில் தொடர்ந்து ரஷ்ய படைகள் குண்டு மழை பொழிந்து வருகிறது.
இதனால், பாதுகாப்பான முகாம்களுக்கு செல்லுமாறு குடியிருப்பு வாசிகளை கார்கிவ் நகர நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.