போதையில் தள்ளாடும் தமிழ் சினிமா
தமிழ் சினிமாவில் டாஸ்மாக் பாடல்களோடு சமீபத்தில் அதிக படங்கள் வெளியாகி வருகிறது. சினிமா பாடல்களில், காதல் சோகத்தை வெளிகாட்ட, மது குடித்து ஹீரோக்கள் பாடுவது போல காட்சிகள் வருவது வழக்கம். இது காலங்காலமாக கடைபிடிக்கப்பட்டு வரும் விஷயம்.
ஆனால் இப்போது இது டிரெண்டாகி இருக்கிறது. சமீபத்தில் வெளியான பெரும்பாலான படங்களில் மதுக்கடை காட்சிகளும் பாடல்களும் இடம்பெறுவது தவிர்க்க முடியாததாக உள்ளது. டாஸ்மாக் கடை பாடல் இடம்பெற்றால் படம் ஹிட்டாகும் என்று கூறப்படுவதால் இப்படியான பாடல்கள் அதிகரித்து வருவதாக கோடம்பாக்கத்தில் கூறுகின்றனர். –
படத்தில் வரும் இளைஞன் ஏதாவது சாதித்தால் டாஸ்மாக்… காதலில் வெற்றி பெற்றால் டாஸ்மாக்… தோல்வி அடைந்தால் டாஸ்மாக்… காமெடி என்றால் டாஸ்மாக்… கானா பாடல் என்றால் டாஸ்மாக்… விழுந்தாலும் எழுந்தாலும் டாஸ்மாக். இன்றைய இளைஞனின் தவிர்க்க முடியாத உறுப்பாக டாஸ்மாக்கை மாற்றிவிட்டது தமிழ் சினிமா.
அதற்கு முக்கிய காரணம் குடியை ஒரு கொண்டாட்டமாக மட்டுமே இதுவரை தமிழ் சினிமா காட்டியிருக்கிறது. அதன் இன்னொரு பக்கத்தை காட்டியதில்லை. குடி குறித்த குற்றவுணர்வை இல்லாமலாக்கியதற்கான பரிசுதான் திரையரங்குகளில் டாஸ்மாக் காட்சிகளுக்கு கிடைக்கும் விசிலும் கைத்தட்டல்களும். ஒவ்வொரு படம் தொடங்காவதற்கு முன்பு குடி உடல் நலத்துக்கு தீங்கானது என்று டைட்டில் போடுகிறார்கள். ஆனால் எல்லாம் பேருக்கு தான்.