தற்போது நடைபெற்று வரும் க.பொ.த உயர்தரப் பரீட்சைகளின் போது மின்சாரம் தடைபடுவதைத் தடுப்பதற்கு சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாக இலங்கை மின்சார சபை இன்று அறிவித்துள்ளது.
இன்று காலை 08.30 – 11.30 மற்றும் பிற்பகல் 01.30 – மாலை 04.30 வரை பரீட்சை இடம்பெறும் வேளையில் மின்சாரம் தடைபடுவதைத் தவிர்ப்பதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபையின் பேச்சாளர் அன்ட்ரூ நவமணி தெரிவித்தார்.
இது தொடர்பில் கல்வி அமைச்சின் செயலாளர் மற்றும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் விடுத்த கோரிக்கைக்கு அமைய இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.
எவ்வாறெனினும் இன்று மாலை 04.00 முதல் இரவு 10.00 மணி வரை மின்சாரம் தடைப்படும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் (PUCSL) தலைவர் ஜனக ரத்நாயக்க குறிப்பிட்டார்.
முன்னதாக, மின்சார சபையின் கோரிக்கையின் அடிப்படையில் இரண்டு பிரிவுகளின் கீழ் இன்று (21) முதல் திட்டமிட்ட மின்வெட்டு அமுல்படுத்த தீர்மானிக்கப்பட்டிருந்தது.
அதன்படி இன்று காலை 08.30 மணி முதல் மாலை 05.30 மணி வரையில் தென் மாகாணம் தவிர்ந்த ஏனைய அனைத்துப் பகுதிகளுக்கும் சுழற்சி அடிப்படையில் ஒரு மணித்தியால மின்வெட்டை அமுல்படுத்துவதற்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியது.
அதேநேரம் தென் மாகாணத்தில் காலை 8:30 மணி முதல் மாலை 4:30 மணி வரையான காலப் பகுதியில் சுழற்சி முறையில் மூன்று மணி நேர மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என்றும் ஆணைக்குழு கூறியிருந்தது.
பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் திட்டமிடப்பட்டுள்ள மின் தடை குறித்த தகவல்களைப் பெற இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://www.pucsl.gov.lk/ ஐப் பார்வையிடலாம்.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]