‘எங்கள் இசை நாடக மரபின் உயர் தனி ஆளுமை நடிகமணி கலாநிதி வி.வி. வைரமுத்து; இசை நாடக மரபிற்கு புதுப்பொலிவும் வடிவும் தந்து இசை நாடக அரங்கை தன்னுடைய அரங்காக்கி மக்கள் மனதை கொள்ளை கொண்டவர் நடிகமணி. எங்கள் பண்பாட்டின் கலை நிமிர்வின் அடையாளம் நடிகமணி கலாநிதி வி.வி.வைரமுத்து.
இசை நாடக பாரம்பரியம் மிக்ககுடும்பத்தில் தோன்றிய அவரின் இயல்பான ஆற்றல்களும் அயரா கலைப்பயில்வும் அக்கலையின் உச்சமாக அவரை உயர்த்தியது. கலை மீதான அவரின் எல்லையிலா அர்ப்பணிப்பும் வாழ்வியல் செம்மையும் நிகரிலாதவை.
அவரின் கலை உன்னத்ததை கௌரவிக்கும் முகமாக எங்கள் பல்கலைக்கழம் அவருக்கு கலா நிதிப்பட்டம் வழங்கி கௌரவம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.
அவரின் மேலான நினைவுகளை காக்கும் வகையில் நிமிர்ந்துள்ள இந்தச்சிலை இக்கலைவடிவத்தினை பேணும் எங்கள் எதிர்கால செயற்பாடுகளுக்கான உயிப்பினை தரும் எனலாம். இந்த உயர் பணியில் இணைந்த அத்தனை பேரும் எங்கள் போற்றுதலுக்குரியவர்கள்.
காங்கேசன் துறை நடேஸ்வராக்கல்லூரி மருங்கில் மக்கள் கலைஞர் அமைபினால் நிறுவப்பட்ட இச் சிலைத் திறப்பு விழாவுக்கு. அமைப்பின் தலைவர் கிருஷ்ணபிள்ளை மனோகரன் அவர்கள் தலைமை தாங்கினார். வைபவத்தின் முதன்மை விருந்தினராகக் கலந்து உருவச்சிலையை நேற்றய தினம் திறந்து வைத்து உரையாற்றும் போது மேற்கண்டவாறு தெரிவித்தார் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் என் சண்முகலிங்கன்.
சிறப்பு விருந்தினர்களாக வலிவடக்கு பிரதேச செயலர் திரு ச.சிவஸ்ரீ, நடேஸ் வராக்கல்லூரி அதிபர்திரு.கு.விபுலன்,கனிஷ்ட வித்தியாலய அதிபர் திருமதி வசந்தராணி சுதர்சன்,வலி-வடக்கு பிரதேச சபை தவிசாளர் சோ. சுகிர்தன் ஆகியோர் கலந்து சிறப்பித்த இவ்வைபவத்தில் சிற்பக் கலைஞர் க. ஸ்ரீஸ்கந்தமூர்த்தி மற்றும் நடிகமணியின் அடிச்சுவட்டில் இசை நாடகக்கலையில் மிளிர்ந்த கலைஞர்கள் கௌரவிக்கப்பட்டார்கள். நடிகமணியின் மூத்தபுதல்வி திருமதி வசந்தா உட்பட மூத்த ,இளம் உறவுகள்,கலைஞர்களில் இசை ,நடன , இசை நாடக நிகழ்வுகளும் இடம் பெற்றன.