இன்றைய திகதியில் எம்மில் பலருக்கும் கோடைகாலத்தில் அல்லாமல் வேறு பருவ நிலையிலும் வியர்வை ஏற்படும். அதிலும் சிலருக்கு இயல்பான அளவைவிட அதிக அளவில் வியர்க்கும். ஹைபர்ஹைட்ரோசிஸ் எனப்படும் இத்தகைய பாதிப்பை கண்டறிய தெர்மோர்குலேட்டரி வியர்வை சோதனை எனப்படும் பரிசோதனை நல்ல பலனை வழங்கி வருவதாக மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.
எம்மில் சிலருக்கு மதிய உணவு உண்ட பின்னர் அதிகமாக வியர்க்கும். வேறு சிலருக்கு கோப்பி பருகியவுடன் அதிகமாக வியர்க்கும். வேறு சிலருக்கு குளித்தவுடன் தலைப்பகுதியில் மட்டும் அதிகமாக வியர்க்கும். வேறு சிலருக்கு இரண்டு கைகள், அக்குள், பாதம் உள்ளிட்ட பகுதிகளில் இயல்பான அளவைவிட கூடுதலாக வியர்க்கும். சிலருக்கு உடல் முழுவதும் வியர்க்கும். இது பல தருணங்களில் அசவுகரியத்தையும், தர்மசங்கடத்தையும் உண்டாக்கி, மனதளவில் பாரிய பாதிப்பை ஏற்படுத்தும்.
எம்முடைய தோல் பகுதியில் உள்ள வியர்வைச் சுரப்பிகள் சமச்சீரற்ற தன்மையில் இயங்குவதால் ஏற்படும் பாதிப்புதான் இவை. பெரும்பாலானவர்களுக்கு மரபியல் காரணிகள் இத்தகைய பாதிப்பு உண்டாகிறது. வேறு சிலருக்கு நீரிழிவு, தைராய்டு பிரச்சனைகள், குறைந்த ரத்த சர்க்கரை அளவு, மாரடைப்பு, நரம்பியல் கோளாறுகள், தொற்றுகள் போன்றவற்றின் காரணமாகவும் இயல்பான அளவைவிட கூடுதலாக வியர்வை உண்டாகும். இத்தகைய பாதிப்பு உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தாது என்றாலும், நாளாந்த செயல்பாட்டில் இடையூறை ஏற்படுத்தினால்… இதற்கான நிவாரண சிகிச்சை மேற்கொள்வது தான் சரியான தீர்வாக அமையும்.
இத்தகைய பாதிப்பு உள்ள நோயாளிகளுக்கு அவர்களின் ரத்தம் மற்றும் சிறுநீர் பரிசோதனையுடன், தற்போது புதிதாக அறிமுகமாகியிருக்கும் தெர்மோர்குலேட்டரி வியர்வை சோதனை என்ற பரிசோதனையும் பரிந்துரைக்கப்படுகிறது. வேறு சிலருக்கு iodine – starch test , skin conductance போன்ற பரிசோதனைகளும் மேற்கொள்ள மருத்துவர்கள் பரிந்துரைப்பர்.
இதற்கு பிரத்தியேக மருந்துகள் மூலம் தற்காலிக நிவாரணத்தை வழங்குவார்கள். சிலருக்கு ஊசி மூலமாகவும், இத்தகைய பாதிப்பை உண்டாக்கும் நரம்பின் செயல்பாட்டில் தடை ஏற்படுத்தும் சிகிச்சையையும் செய்து, இதற்கு நிவாரணத்தை வழங்குவார்கள். வெகு சிலருக்கு மட்டுமே மைக்ரோவேவ் தெரபி எனப்படும் சிகிச்சையை செய்துகொள்ள பரிந்துரைப்பர். மேலும் வேறு சிலருக்கு வியர்வை சுரப்பிகளை அகற்றும் சத்திர சிகிச்சையும் செய்து கொள்ள பரிந்துரைப்பர்.
டொக்டர் தீப்தி.
தொகுப்பு அனுஷா.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]