இலங்கை அணிக்கு எதிரான மூன்றாவது டி:20 கிரிக்கெட் போட்டியில் அவுஸ்திரேலியா 6 விக்கெட்டுகள் மற்றும் 19 பந்துகள் மீதமிருந்த நிலையில் வெற்றி பெற்று 3:0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியுள்ளது.
அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை, அவுஸ்திரேலிய அணியுடன் ஐந்து போட்டிகள் கொண்ட டி:20 சர்வதேச கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது.
தொடரின் முதலிரு போட்டிகளையும் அவுஸ்திரேலியா ஏற்கனவே வென்றுள்ள நிலையில் மூன்றாவது போட்டி உள்ளூர் நேரப்படி இன்று பிற்பகல் கான்பராவில் ஆரம்பமானது.
போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலியா முதலில் துடுப்பெடுத்தாடும் வாய்ப்பினை இலங்கைக்கு வழங்கியது.
அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணியால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் நிறைவில் 7 விக்கெட் இழப்புக்கு 121 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொள்ள முடிந்தது.
இலங்கை சார்பில் அதிகபடியாக அணித் தலைவர் தசுன் ஷாக்க மாத்திரம் 39 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார்.
பின்னர் 120 பந்துகளில் 122 ஓட்டம் என்ற இலகுவான வெற்றி இலக்கினை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா 16.5 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுகளை இழந்த நிலையில் 124 ஓட்டங்களை பெற்று, வெற்றியிலக்கை கடந்தது.
இலங்கை சார்பில் பந்து வீச்சில் மகேஷ் தீக்ஷண முதல் பந்தில் பென் மெக்டெர்மாட்டை கோல்டன் டக்கவுட் முறையில் ஆட்டமிழக்க செய்திருந்தார். அதன் பின்னர் 4.4 ஆவது ஓவரிலும் அவர் ஆஷ்டன் அகரை எல்.பி.டபிள்யூ முறையில் ஆட்டமிழக்க செய்தார்.
எனினும் அதன் பின்னர் களமிறங்கிய ஏனைய வீரர்களின் நிதானமான ஆட்டம் அவுஸ்திரேலியாவுக்கு வெற்றி பெற்றுக் கொடுத்தது.
அவுஸ்திரேலிய அணி சார்பில் அணித் தலைவர் ஆரோன் பின்ஞ்ச் 35 ஓட்டங்களையும், மெக்ஸ்வெல் 39 ஓட்டங்களையும் குவித்தனர்.
இந்த வெற்றியின் மூலம் அவுஸ்திரேலியா ஐந்து போட்டிகள் கொண்ட டி:20 தொடரை 3:0 என்ற கணக்கில் கைப்பற்றியது.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]