தனது தடுப்பூசி நிலைப்பாடு காரணமாக பிரெஞ்சு ஓபன் மற்றும் விம்பிள்டனில் விளையாடுவதை தவிர்க்க தயாராகவுள்ளதாக உலகின் நம்பர் 1 டென்னிஸ் வீரரான நோவக் ஜோகோவிச் தெரிவித்துள்ளார்.
பிபிசி செய்திச் சேவைக்கு வழங்கிய காணொளி நேர்காணல் ஒன்றிலேயே அவர் இந்த விடயத்தை கூறினார்.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் உரிய தடுப்பூசி விலக்கு இல்லாமல் அவுஸ்திரேலியாவுக்குள் நுழைய முயன்ற ஜோகோவிச் சர்ச்சையில் சிக்கினார். பின்னர் 20 முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியனான அவர் அவுஸ்திரேலிய நீதிமன்றின் உத்தரவுக்கு அமைய நாடு கடத்தப்பட்டார்,
அதனால் மெல்போர்னில் நடைபெற்ற அவுஸ்திரேலிய ஓபனில் விளையாடும் வாய்ப்பையும் இழந்தார்.
மெல்போர்ன் ஓபனுக்கு முன்னர் ஜோகோவிச், ரஃபேல் நடால் மற்றும் ரோஜர் பெடரருடன் இணைந்து 20 கிராண்ட்ஸ்லாம் ஒற்றையர் பட்டங்களை வென்றிருந்தார்.
ஜோகோவிச் இல்லாததால், நடால் அவுஸ்திரேலிய ஓபனை வென்று, 21 ஆவது கிராண்ட்ஸ்லாம் ஒற்றையர் பட்டத்தை முத்தமிட்டார்.
இவ்வாறான பின்னணியிலேயே 34 வயதான செர்பிய வீரரான ஜோகோவிச்சிடம் பிபிசி மேற்கொண்ட பிரத்தியோகமான மெய்நிகர் காணொளியில் அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
அத்துடன் இந்த நேர்காணலில் அவர் கொவிட் -19 க்கு எதிராக எந்த தடுப்பூசியும் பெறவில்லை என்றும் கூறினார்.
தடுப்பூசிக்கு நான் ஒருபோதும் எதிரானவன் அல்ல. உலகளவில், அனைவரும் இந்த வைரஸைக் கையாள்வதற்கும், வைரஸை விரைவில் முடிவுக்குக் கொண்டுவருவதற்கும் ஒரு பெரிய முயற்சியை எடுக்க முயற்சிக்கிறார்கள் என்பதை நான் புரிந்துகொள்கிறேன்.
இன்று தடுப்பூசி போடப்படாததால், தற்போது பெரும்பாலான போட்டிகளுக்கு என்னால் பயணிக்க முடியாது என்பதை நான் புரிந்துகொள்கிறேன் என்றும் கூறினார்.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]