ஜெனீவாவில் பல சவால்களை எதிர்கொண்டுள்ள இந்த சந்தர்ப்பத்தில் ஊடகவியலாளரை இலக்காகக் கொண்ட தாக்குதல்கள் நாட்டுக்கு சர்வதேசத்தின் மத்தியில் கரும்புள்ளியை ஏற்படுத்தியுள்ளது. ஜெனீவா சவால்களை வெற்றி கொள்ள வேண்டும் என்ற பொறுப்பும் , ஜீ.எஸ்.பி. பிளஸ் வரி சலுகையை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்ற தேவையும் காணப்படுமாயின் தாக்குதல்களுடன் தொடர்புடையவர்களை கைது செய்ய அரசாங்கம் துரித நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் வலியுறுத்தினார்.
கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,
ஊடகவியலாளரின் இல்லத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை ஐக்கிய மக்கள் சக்தி என்ற அடிப்படையில் கடுமையாக கண்டிக்கின்றோம். ஐக்கிய மக்கள் சக்தி நாட்டின் ஜனநாயகம் , மனித உரிமைகள் , அடிப்படை மனித உரிமைகள் மற்றும் ஊடக சுதந்திரம் என்பவற்றை மதிக்கும் கட்சியாகும். அவை நாட்டில் ஸ்திரப்படுத்தப்பட வேண்டும் என்று நம்பும் கட்சி என்ற அடிப்படையில் இந்த தாக்குதலை கண்டிக்கின்றோம்.
இந்த தாக்குதல்களுடன் 2015 க்கு முன்னர் காணப்பட்ட ஆட்சியில் கீர் நொயார் , உபாலி தென்னகோன் , சனத் பாலசூரிய , போதல ஜயந்த ஆகியோர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களும் , இறுதியாக பிரகீத் எக்னலிகொட காணாமல் போனமையும் , லசந்த விக்கிரமதுங்க பொது வெளியில் கொலை செய்யப்பட்டமை என்பன நினைவிற்கு வருகின்றன.
நாடு பொருளாதார ரீதியில் வங்குரோத்து நிலைமையை அடைந்துள்ள இந்த சந்தர்ப்பத்தில் , இலங்கைக்கு வழங்கப்படும் ஜீ.எஸ்.பி. வரி சலுகையை தொடர்ந்தும் வழங்குவதா இல்லையா என்பது குறித்து ஐரோப்பிய பாராளுமன்றத்தில் எதிர்வரும் மே மாதம் தீர்மானிக்கப்படவுள்ள நிலையில், ஜெனீவா மனித உரிமைகள் பேரவை முன்னிலையில் வெற்றி கொள்ள வேண்டிய பாரிய சவால்களை எதிர்கொண்டுள்ள நிலையில் இந்த தாக்குதலை எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அனுமதிக்க முடியாது. இது எமது நாட்டுக்கு கரும்புள்ளியை ஏற்படுத்தியுள்ளது.
சர்வதேசம் எந்தவொரு நாட்டிலும் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுள்ள அரசாங்கம் காணப்படுகிறதா என்பதை பார்ப்பதில்லை. ஸ்திரமான அரசாங்கம் காணப்படுகிறதா என்பதையே அவதானிக்கும். ஸ்திரமான அரசாங்கத்தின் பிரதான விடயங்கள் பிரஜைகள் சுதந்திரமும் , சட்டங்கள் முறையாக நடைமுறைப்படுத்தப்படுவதுமாகும். வெளிநாட்டு முதலீடுகளை மேற்கொள்ள முடியுமா என்று எதிர்வு கூறப்படுவதும் இவற்றை அடிப்படையாகக் கொண்டே ஆகும்.
ஜெனீவாவில் பெரும் நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ள இந்த சந்தர்ப்பத்தில் இவ்வாறான தாக்குதல்கள் மூலம் இலங்கையின் உண்மையான தோற்றம் சர்வதேசத்திற்கு பகிரங்கமாகக் காண்பிக்கப்படுகிறது. ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கம் இதனை ஏற்றுக் கொள்கிறதா? இது மீண்டும் வெள்ளை வேன் கலாசாரத்தின் ஆரம்பமா? ஜெனீவா சவால்களை வெற்றி கொள்வதற்கும் , ஜீ.எஸ்.பி. வரி சலுகையை பாதுகாத்துக் கொள்வதற்குமான தேவை அரசாங்கத்திற்கு காணப்பட்டால் இந்த குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும்.
எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தமது பேனையையும் , ஒளிப்பதிவு கருவிகளையும் உபயோகிக்கும் உரிமை ஊடகவியலாளர்களுக்கு காணப்படுகிறது. எனவே இயன்றவரை துரிதமாக இதனுடன் தொடர்புடையவர்களை கைது செய்யுமாறு அரசாங்கத்தை வலியுறுத்துகின்றோம் என்றார்.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]