வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் இன்று ஞாயிற்றுக்கிழமை இரு நாள் உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டு டெல்லி செல்கின்றார்.
செவ்வாய்க்கிழமை வரை டெல்லியில் தங்கியிருக்கும் அவர் பிரதமர் நரேந்திர மோடி உட்பட முக்கியஸ்தர்கள் பலரையும் சந்தித்து கலந்துரையாட உள்ளார்.
இந்த சந்திப்புகளின் போது ஐ.நா மனித உரிமை பேரவையின் நெருக்கடி மற்றும் இலங்கையின் நிலைப்பாடு குறித்து வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் பீரிஸ் விளக்கமளித்து ஆதரவை கோரவுள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 49 ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் 28 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு ஏப்ரல் 1 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளன. மார்ச் மாதம் 2 ஆம் திகதி இலங்கை குறித்த எழுத்து மூலமான அறிக்கை சமர்பிக்கப்பட உள்ளது.
பிரித்தானியா , கனடா மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகள் இலங்கை குறித்து தனித்தனியே வாய்மூல விளக்கங்களை முன்வைக்க உள்ளன.
இதன் போது ஏற்கனவே கோரியது போன்று இலங்கைக்கு எதிரான பாரதூரமான மீறல்கள் குறித்து ஆய்வு செய்ய வெளிக்கள விசாரணை மையம் குறித்தும் வலியுறுத்தப்படலாம்.
எனவே இலங்கைக்கு சாதகமான நிலை ஜெனிவாவில் இல்லை என்பது வெளிப்படையாகியுள்ளது. அதேபோன்ற ஜெனிவா தீர்மானங்கள் இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடிகளிலும் பாதகமான நிலைமை தோற்றுவிக்கும். எனவே தான் அரசாங்கம் மீண்டும் நட்பு நாடுகளின் ஒத்துழைப்புகளை நாடி வருகின்றது.
இலங்கை வழங்கிய உறுதிமொழிகள் குறித்தும் ஏற்கனவே வழங்கப்பட்ட கால அவகாசத்தின் முன்னேற்றங்கள் குறித்தும் இம்முறையும் ஜெனிவாவில் நாடுகள் கேள்விகள் எழுப்பும். குறிப்பாக இம்முறை முன்வைக்கப்படவுள்ள எழுத்து மூலமான சமர்ப்பணத்தில் கடுமையான பரிந்துரைகள் காணப்படலாம் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
இந்த நெருக்கடி குறித்து கவனத்தில் கொண்டுள்ள அரசாங்கம் நட்பு நாடுகளுடன் தொடர்களை ஏற்படுத்தி ஐ.நா மனித உரிமைகள் பேரவை சவால்களை எதிர்கொள்வதற்காக முயற்சிகளை ஆரம்பித்துள்ளது.
இதன் ஒரு கட்டமாகவே கொழும்பில் உள்ள பன்னாட்டு இராஜதந்திரிகளையும் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் சந்தித்து ஜெனிவா விவகாரம் குறித்து கலந்துரையாடியிருந்தார்.
இந்தியாவுடன் தற்போது ஏற்படுத்திக்கொள்ளப்பட்டுள்ள நல்லுறவின் அடிப்படையில் ஜெனிவாவில் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்வது என்பது இலங்கைக்கு இம்முறை இன்றியமையாததொன்றாகியுள்ளது.
இலங்கை தொடர்பான இந்தியாவின் தொடர்ச்சியான நிலைப்பாடானது முக்கிய இரு தூண்களில் உள்ளதாக கடந்த ஜெனிவா அமர்வில் கூறப்பட்டது. அதாவது இலங்கையின் ஒற்றுமை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டிற்கான ஆதரவு மற்றும் சமத்துவம், நீதி, அமைதி , கௌரவத்திற்கான இலங்கைத் தமிழர்களின் அபிலாஷைகளுக்கு உறுதியளித்தல் ஆகிய இரு பிரதான தூண்களை மையப்படுத்தியது என்பதாகும்.
இவை தவிர வேறு தேர்வுகள் இல்லை. அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வு உட்பட தமிழ் சமூகத்தின் உரிமைகளை மதிப்பது, இலங்கை ஒற்றுமைக்கும், ஒருமைப்பாட்டிற்கும் நேரடியாக பங்களிப்பு செய்யும் என்பதை உறுதியாக நம்புவதாகவும் தமிழ் சமூகத்தின் நியாயமான அபிலாஷைகளை நிறைவேற்றுவது இலங்கையின் சிறந்த நலன்களுக்கானது என்றும் ஜெனிவாவிற்கான இந்தியாவின் நிரந்தர வதிவிட பிரதிநிதி இந்திரா மணி பாண்டே பரிந்துரைத்திருந்தார்.
டெல்லிக்கும் கொழும்பிற்கும் ஏற்படுத்திக்கொள்ளப்பட்டுள்ள தற்போதைய சுமூகமான உறவை ஜெனிவாவிலும் பிரதிப்பளிக்க செய்ய இலங்கை மும்முரமாக செயற்படுகின்றது.
மறுப்புறம் வெளிவிவகார அமைச்சரின் டெல்லி விஜயத்தின் பின்னராகவும் ஜெனிவா அமர்விற்கு முன்பாகவும்; அரசாங்கம் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் பேச்சு வார்த்தைகளை முன்னெடுக்கலாம் என முக்கிய இராஜதந்திர பணியாளர் ஒருவர் எதிர்வு கூறினார். இந்த பேச்சு வார்த்தையானது ஜனாதிபதி தலைமையில் இடம்பெறலாம் எனவும் குறிப்பிட்டார்.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]