பனை மரத்துக்கு நிகரானவை
எங்கள் புத்தகக் கடைகள்.
சில வேளைகளில்
அவை
பனை மரத்தைவிடவும் மேலானவை.
மட்டுமன்றி,
தேசியங்களைச் சமரசம் செய்வதில் வலிமையானவையும்,
அவற்றை உயரத் தொங்கவிடுவதில்
உயரமானவையுங்கூட…
தமிழ்த் தேசிய நாளிதழ் கட்டுகளின்மேல்,
சிங்கக் கொடிகளைக் குவித்து
விறுவிறு என்று விற்பதில்
தாராள மனமுள்ளவை.
‘சுதந்திரத்தைப் புறக்கணிப்போம்’
என்ற கொட்டை எழுத்துப் பத்திரிகையோடு,
நீட்டும் கைகளுக்கு
சுதந்திரக் கொடியையும்
சேர்த்து வழங்கி
இரு தேசியத்துக்கும்
திருமணம் முடித்து அழகு பார்ப்பதில்
அலாதித் திருப்தி கொள்பவை.
வடிகட்டாமலே வழங்கும்
வல்லமை இருப்பதால்
விண்ணாதி விண்ணரான
புத்தகக் கடைகளுக்குப்
பன்னாடை இல்லாதிருப்பது
ஒன்றும் குறையல்ல.
பெரும் நிறைவே!
பொங்கல் பட்டங்களையும்
வெசாக் கூடுகளையும்
கொழுவி விட்டு,
சிவனையும் புத்தரையும்
கோத்துவிடுவதில்,
புத்தகக் கடைகள் போதிமரங்கள்.
பிரிய பிதாவே!
நாடு முழுவதையும்
புத்தகக்கடை ஆக்குவோனுக்கு,
நாட்டை விற்கச் சித்தமாயிருக்கிறேன்.
இந்தச் சிறு தீவு
புத்தகக் கடைகளின் தீவாக மலரட்டும்!
மலர்ந்தால்…
இரு தேசியங்களுக்குள்ளே
என்னதான் பிரச்சினை!
இரண்டுமே முத்தமிட்டுக்கொண்டிருக்கும்.
புத்தகக் கடை ஜனநாயக சோஷலிசக் குடியரசுமீது
அமர காவியம் பாடும்
காலம் ஒன்றிற்காகக் காத்திருக்கிறேன்.
எப்போதெனில்,
புத்தகக் கடைகளில் சாம்பார் விற்கும்போது!
—————————–
செ.சுதர்சன் 03/02/2022