“கட்சியில் உங்கள் இருப்பை பாதுகாப்பதற்கான அத்தனை தந்திரங்களை செய்தபடியும் கட்சியின் உயர் பதவிகளை இலக்கு வைத்து காய்களை நகர்த்தியபடியும் மறுபக்கத்தில் தமிழ் மக்களை ஏமாற்றியபடியும் இருக்கும் சிறீதரன் அவர்களே நீங்கள் எந்தக் கட்சி? எமக்குச் சந்தேகமாக இருக்கிறது… இவ்வாறு கடும் தொனியில் தன் சீற்றத்தை பதிவு செய்துள்ளார் கிருபா பிள்ளை…”
அண்மையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உள்ளடங்கலாக தமிழ் தேசிய கட்சிகள் இந்தியப் பிரதருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளன. அதில் 13ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்த இந்தியா உதவ வேண்டும் என்ற கோரிக்கை பிரதானமாக முன்வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி 13ஆவது திருத்தச் சட்டம் தமிழ் மக்களுக்குத் தேவையல்ல என்றும் தமிழர் தேசத்தை அங்கீகரிக்கும் தீர்வே வேண்டும் என்றும் போராட்டங்களை நடாத்தி வருகிறன்மை கவனத்தை ஏற்படுத்தியுள்ளது.
அத்துடன் மக்களும் இப் போராட்டத்திற்கு பெரும் ஆதரவு அலையை அள்ளி வழங்கி வருகின்றனர். இத்தகைய போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என்பதையே அண்மையில் ஈஸி24நியூசில் நான் எழுதும் பக்கத்திலும் வலியுறுத்தியிருந்தேன்.
இந்த நிலையில் தமிழ் தேசிய முன்னணியின் போராட்டப் பாதையை மக்கள் பற்றிப் பிடித்துள்ள நிலையில் கூட்டமைப்பு வழங்கிய கடிதத்திற்கு மாறாகவும் தாம் 13ஆவது திருத்தத்தை ஆதரிக்கவில்லை என்றும் திரு சிறீதரன் எம்பி கருத்துக் கூறியுள்ளார்.
அப்படி என்றால் சிறீதரன் அவர்கள் எந்தக் கட்சியில் உள்ளார்? விலாங்கு மீன் போல தலையையும் வாலையும் மாறி மாறி காட்டி மக்களை ஏமாற்றும் வித்தையை செய்கிறரா இவர்?
இதேபோல கடந்த காலத்திலும் கட்சியை இறுகப் பற்றியபடி, கட்சியில் உள்ள சுமந்திரன் போன்றவர்களை ஆதரித்தபடி, அவர்கள் ஒன்று பேசினால் சிறீதரன் வேறுவிதமாக பேசி மக்களை ஏமாற்றி சமாளிக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டிருந்தார்.
இனியும் இதையெல்லாம் மக்கள் நம்பத் தயாரில்லை. எனவே திரு சிறீதரன் அவர்களுக்கு இடித்துரைக்கும் இந்த சந்தர்ப்பத்தில் அனைத்து அரசியல்வாதிகளும் தங்கள் ஏமாற்று வித்தைகளை தலைமுழுகிக் கொள்ள வேண்டும் என்று எச்சரிக்கின்றோம்.
கடந்த தேர்தலில் மக்கள் வழங்கிய எச்சரிக்கை மணியை தமிழ் அரசியல்வாதிகள் புரிந்துகொள்ளாது விட்டால் உங்கள் ஏமாற்று அரசியலுக்கு இனி, சாவு மணியை மக்கள் அடிப்பார்கள் என்றும் அறிவுறுத்துகிறோம்.
-கிருபா பிள்ளை
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]