“ஈழத் தமிழ் மக்களுக்கு நிலையான நிரந்தர அரசியல் தீர்வு கிடைக்க இந்திய மத்திய அரசுக்கு தமிழ்நாட்டின் முதல்வர் மாண்புமிகு மு.க. ஸ்டாலின் அவர்கள் அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று ஈழ மக்களின் சார்பில் விநயமாக வலியுறுத்துகிறேன்…”
இலங்கை – இந்திய ஒப்பந்தத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட 13ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி தமிழ் கட்சிகள் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளன.
13ஆவது திருத்தத்திற்கு அப்பால் தமிழ் மக்களுக்கான தீர்வு சுய நிர்ணய அடிப்படையில் வழங்கப்பட வேண்டும் என்பதுவே ஈழ மக்களின் கோரிக்கையும் தமிழ் அரசியல் கட்சிகளின் நிலைப்பாடும் என்பது யாவரும் அறிந்ததே.
திராவிட முன்னேற்றக் கழகமும் சரி, தமிழக அரசும் சரி தொப்புள்கொடி உறவுகளான ஈழ மக்களுக்கு என்றுமே ஆதரவை அளித்து வருபவர்கள். இந்த ஆதரவு மாற்றங்களை உருவாக்கும் செயற்பாடக மாறினால் அது சிறந்த வரலாறாக பதிவாகும்.
இந்த நிலையில் தமிழகத்தில் புதிய முதல்வராகப் பதவியேற்று பல்வேறு முன்னூதாரணமாக செயற்பாடுகளை தமிழ்நாட்டில் செய்து வரும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் ஈழத் தமிழர்களின் தீர்வு விடயத்திலும் களமிறங்க வேண்டும்.
13ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்த இந்தியப் பிரதமருக்கு ஸ்டாலின் அவர்கள் அழுத்தம் கொடுப்பதுடன் அதற்கும் அப்பாலான அதிகாரம் உள்ள தீர்வை ஈழ மக்களுக்கு வழங்க வேண்டும் என்றும் தமிழ்நாட்டு மக்கள் சார்பில் வலியுறுத்த வேண்டும்.
இவ்வாறு செயற்படுவதன் வாயிலாக ஈழத் தமிழர்களின் விடயத்தில் கடந்த காலத்தில் விடப்பட்டதாக கூறப்பட்டும் தவறுகளின் நினைவுகளை இல்லாமல் செய்வதுடன் தமிழ்நாட்டு மக்களினதும் உலகத் தமிழ் மக்களினதும் ஆதரவு இன்றைய அரசுக்குப் பெருகும்.
அத்துடன் சீனாவின் ஆதிக்கங்களை தடுப்பதுடன் அதுவே தமிழ்நாட்டிற்கும் இந்தியாவுக்கும் பாதுகாப்பை பலப்படுத்தும் என்பதையும் இத் தருணத்தில் அன்புரிமையுடன் சுட்டிக்காட்டுகிறேன்.
கிருபா பிள்ளை
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]