தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக விளங்கி வரும் நடிகர் நாசர் சமீபத்தில் பத்மஸ்ரீ விருது கிடைத்த நடிகை சவுக்கார் ஜானகியை நெகிழ்ந்து பேசியுள்ளார்.
தமிழ் சினிமாவின் பழம்பெரும் நடிகையும் திரையுலகின் பல சாதனைகள் படைத்திட்ட வரலாற்று புகழ் நடிகை சவுக்கார் ஜானகி. சமீபத்தில் நடிகை சவுகார் ஜானகிக்கு மத்திய அரசு பத்மஸ்ரீ விருது வழங்கியுள்ளது. இவர் 1931-ம் ஆண்டு ஆந்திர மாநிலம் ராஜமுந்திரியில் பிறந்தவர். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் 400 திரைப்படங்களில் நடித்துள்ளார். என்.டி.ராமராவ் நடித்த சவுகார் என்ற தெலுங்கு படத்தில் 19-வது வயதில் கதாநாயகியாக அறிமுகம் ஆனார். அவர் 70 வருடங்களாக சினிமாவில் நடித்துள்ளார். 1950-ம் ஆண்டு முதல் 1980-ம் ஆண்டு வரை அவர் மிகவும் பிரபலமாக விளங்கினார்.
பாலசந்தர் இயக்கிய ஏராளமான படங்களில் நடித்தார். இதில் இரு கோடுகள், பாமா விஜயம், எதிர்நீச்சல் ஆகியவை அடங்கும். எதிர்நீச்சல் படத்தில் அவர் நடித்த பட்டுமாமி கதாபாத்திரம் தேசிய அளவில் புகழ் பெற்றது. புதிய பறவை, தில்லுமுல்லு படங்களில் கிளப் பாடகியாக நடித்துள்ளார். இவர் ஜெமினி கணேசனின் தோழி ஆவார். சவுகார் ஜானகியின் திறமைகளை ஜெமினி கணேசன் வெளிப்படையாக பாராட்டியுள்ளார்.
இவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கியதை குறித்து தமிழ் சினிமா நடிகர், நடிகைகள் சார்பில் நடிகர் நாசர் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில்.. ஓ எங்கள் ‘சவுக்கார்’ அம்மா.. அத்தனை மொழிகளிலும் மறக்க முடியாத எத்தனை நூறு படங்கள்! ஒவ்வொன்றும் முத்தாய்! ஒன்றில் கண்டது.. இன்னொன்றில் இல்லை. புதிது புதிதாய் கண்டு ரசிக்க கண்கோடி! ‘புதிய பறவையில்’ மிரட்டியதும் மிரண்டு போனதும் ஒரே ஜோடிக்கண்களா? ஆச்சர்யம்! கண்களை மிஞ்சும் உங்கள் முத்துசிரிப்பு! அச்சிரிப்பினும் வழிந்தோடும் உண்மையான உங்கள் அன்பும் பாசமும்!! தாங்கள் எங்களுக்கு தந்த கதாப்பாத்திரங்கள் ஒவ்வொன்றையும் முத்தாய் கோர்த்து அழகு பார்த்து மனமகிழ்ந்து விம்மிய எங்களுக்கு அம் முத்துமாலைக்கு பதக்கமாய் இன்று “பத்மஶ்ரீ” உங்களுக்கு கிடைத்திருப்பது எங்களுக்கு பெருமை. தமிழ் திரையுலகிற்கு கிடைத்த கொடை நீங்கள், என்றென்றும் நீடுடி வாழ நடிகர், நடிகைகள் சமூகம் சார்பில் வாழ்த்தி வணங்குகிறோம். “பத்மஶ்ரீ” விருது அறிவித்த ஒன்றிய அரசுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறோம்“ என்று அவர் வாழ்த்தியுள்ளார்.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]