அரசாங்கத்தினால் அமைச்சர்களுக்கு வழங்கப்படும் அனைத்து வீடுகளிலும் ஜெனரேட்டர்கள் உள்ளன. ஆனால் சாதாரண மக்களின் வீடுகளில் ஜெனரேட்டர் வசதி இல்லை என்பதன் காரணமாக மின்துண்டிப்பினால் அவர்களது அன்றாட செயற்பாடுகள் வெகுவாகப் பாதிப்படைகின்றன.
2022 ஆம் ஆண்டிற்குள் இந்தியாவிற்கு மின்சாரத்தை வழங்குவோம் என்று கூறிய அரசாங்கம், இப்போது எமது நாட்டில் மின்துண்டிப்பை மேற்கொள்வதற்கு அனுமதிபெறும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்ற பின்னணியில், குறைந்தபட்சம் எமது நாட்டிற்கேனும் உரியவாறு மின்சாரத்தை விநியோகிக்குமாறு கேட்டுக்கொள்வதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா வலியுறுத்தியுள்ளார்.
கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித்தலைவர் அலுவலகத்தில் நேற்று புதன்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் கூறியதாவது:
தற்போதைய அரசாங்கம் ஆட்சிபீடமேறி இரண்டு வருடங்கள் பூர்த்தியடைந்துள்ள நிலையில், இன்னமும் நாட்டுமக்கள் தொடர்ச்சியாக ஏமாற்றப்பட்டுவருகின்றார்கள். 2022 ஆம் ஆண்டிற்குள் இந்தியாவிற்கு மின்சாரத்தை வழங்குவோம் என்று கூறிய அரசாங்கம், இப்போது எமது நாட்டில் மின்துண்டிப்பை மேற்கொள்வதற்கு அனுமதிபெறும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றது.
மின்சாரம் துண்டிக்கப்படாது என்று அவ்விடயதானத்திற்குப் பொறுப்பான அமைச்சர் கூறுகின்றார். இருப்பினும் மின்சாரம் துண்டிக்கப்படும் என்று இலங்கை மின்சாரசபை கூறுகின்றது. ஆகவே நாட்டில் நடப்பது என்னவென்று அவர்கள் இருவருக்கும் தெரியவில்லை. இவ்வாறானதொரு பின்னணியில் நேற்று முன்தினம் முன்னறிவிப்பின்றி நாட்டில் பல பாகங்களிலும் மின்சாரம் துண்டிக்கப்பட்டிருப்பதாக ஊடகங்கள் வாயிலாக அறிந்துகொள்ளமுடிந்தது.
இவ்வாறு மின்துண்டிப்பை மேற்கொண்டு மக்களை நெருக்கடிக்குள் தள்ளுவதை அரசாங்கம் உடனடியாக நிறுத்தவேண்டும்.
அமைச்சர்களுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்படும் அனைத்து வீடுகளிலும் ஜெனரேட்டர்கள் உள்ளன. ஆனால் சாதாரண மக்களின் வீடுகளில் ஜெனரேட்டர் வசதி இல்லை என்பதுடன் மின்துண்டிப்பினால் அவர்களது அன்றாட செயற்பாடுகள் வெகுவாகப் பாதிப்படைகின்றன.
இவையனைத்தும் மின்னுற்பத்திக்கு அவசியமான எரிபொருளையோ அல்லது நிலக்கரியையோ கொள்வனவு செய்வதற்கு அரசாங்கத்திடம் போதியளவு பணம் இல்லாமையின் விளைவு என்பதை மக்கள் புரிந்துகொள்ளவேண்டும்.
எதிர்வருங்காலங்களில் மின்சாரம் துண்டிக்கப்படும் நேரம் 2 – 3 மணித்தியாலங்களாக நீடிக்கப்படும்போது தற்போதைய நெருக்கடிகள் மேலும் தீவிரமடையும்.
நல்லாட்சி அரசாங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்ட புதுப்பிக்கத்தக்க எரிசக்தி செயற்திட்டம் தற்போது உரியவாறு முன்னெடுக்கப்படவில்லை. அச்செயற்திட்டத்தை மீண்டும் உரியவாறு முன்னெடுக்காவிட்டால் நாடு பாரிய நெருக்கடிக்குள் தள்ளப்படும் என்பதை அரசாங்கம் புரிந்துகொள்ளவேண்டும்.
அடுத்ததாக நாடளாவிய ரீதியில் தற்போதும் எரிவாயு சிலிண்டர் வெடிப்புச்சம்பவங்கள் தொடர்ந்து பதிவாகிவரும் நிலையில், அரசாங்கம் அதற்கு இன்னமும் உரியவாறான தீர்வைப் பெற்றுக்கொடுக்கவில்லை. இவ்விவகாரம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்குமாறுகோரி நாம் ஏற்கனவே குற்றப்புலனாய்வுத்திணைக்களத்தில் முறைப்பாடளித்திருந்தோம்.
எனினும் இதுகுறித்து வாக்குமூலம் வழங்குவதற்கு வருகைதருமாறு லிட்ரோ நிறுவன அதிகாரிகளுக்கு இருமுறை எழுத்துமூலம் அழைப்புவிடுத்திருந்தபோதிலும், அவர்கள் வருகைதரவில்லை என்று குற்றப்புலனாய்வுத்திணைக்கள அதிகாரிகள் எம்மிடம் தெரிவித்தனர்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ‘வியத்மக’ அமைப்பின் செயற்பாட்டாளர்களில் ஒருவரான லிட்ரோ நிறுவனத்தின் தற்போதைய தலைவருக்கு நாட்டின் பொதுவான சட்டதிட்டங்கள் பொருந்தாதா? எனவே இவ்விவகாரம் தொடர்பில் உடனடியாக நடவடிக்கை எடுத்து, குற்றவாளிகளை சட்டத்தின் முன்நிறுத்துமாறு வலியுறுத்துகின்றோம்.
அண்மைய காலங்களில் நாட்டின் பொருளாதாரம் பாரிய நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்துள்ளது. அதனை ஓரளவிற்கேனும் சீரமைப்பதற்கான கடன் மறுசீரமைப்பை மேற்கொள்ளுமாறும் சர்வதேச கட்டமைப்புக்களின் உதவியை நாடுமாறும் நாம் தொடர்ச்சியாக வலியுறுத்திவந்தோம். இருப்பினும் அரசாங்கம் அதனைச்செய்யவில்லை.
தற்போதைய நெருக்கடிகள் அனைத்தையும் விரைவில் சீர்செய்யமுடியும் என்று கூறுகின்ற நிதியமைச்சர், அதற்கான வழிமுறைகளைத் தெளிவுபடுத்துவதற்குத் தயங்குகின்றார். இப்போது நாட்டின்வசமுள்ள கையிருப்பில் இருந்து கடன்களுக்குரிய கொடுப்பனவாக 500 மில்லியன் டொலர்களைச் செலுத்திவிட்டால், இருப்பின் அளவு மேலும் வீழ்ச்சியடைந்துவிடும்.
இந்த 500 மில்லியன் டொலர்களைச் செலுத்துவதன் ஊடாக அரசாங்கத்திற்கு நெருக்கமானவர்கள் பயனடைவார்கள் என்பதனாலேயே அதனைச் செலுத்துவதில் அரசாங்கம் பெரிதும் நாட்டம் காண்பிக்கின்றது என்று சுட்டிக்காட்டினார்.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]