சாதனைகள் படைக்க உடல் குறைபாடு தடையில்லை: தங்கமகன் மாரியப்பன்
சாதனைகளை படைப்பதற்கு உடல் குறைபாடு தடையில்லை என பாரா ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற தமிழக வீரர் மாரியப்பன் தெரிவித்துள்ளார்.
சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்த பெரிய வடகம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் தங்கவேல். இவரது மூத்த மகன் மாரியப்பன்(21). பிரேசில் நாட்டில் ரியோ நகரில் நடந்த மாற்றுத்திறனாளிகளுக்கான பாரா ஒலிம்பிக்கில் உயரம் தாண்டுதல் போட்டியில் தங்கப்பதக்கம் வரலாற்று சாதனை படைத்துள்ளார்.
தங்கப் பதக்கம் வென்று நாட்டுக்கும் தமிழகத்துக்கும் பெருமை சேர்த்திருக்கும் மாரியப்பனுக்கு ரூ2 கோடி பரிசு வழங்கப்படும் என்றும் முதல்வர் ஜெயலலிதா தம்முடைய அறிக்கையில் தெரிவித்திருந்தார். இந்நிலையில் இன்று மாலை சென்னை வந்த மாரியப்பனுக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தமிழக அமைச்சர்கள் மாஃபா பாண்டியராஜன், பெஞ்சமின் ஆகியோர் மாரியப்பனை வரவேற்றனர்.
பின்னர் செய்தியாளர்களுடன் பேசிய மாரியப்பன், நாட்டுக்காக தங்க பதக்கம் பெற்று கொடுத்ததில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. ஆதரவு அளித்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு மிக்க நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
எனக்கு ஊக்கமளித்த ஊர்மக்கள், கல்லூரி நிர்வாகத்திற்கு நன்றி. அடுத்த பாரா ஒலிம்பிக்கில் போட்டியிலும் பங்கேற்று தங்கம் வென்று நாட்டிற்கு பெருமை சேர்ப்பேன். சாதனைகள் படைப்பதற்கு உடல் குறைபாடு ஒன்றும் தடையில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
இதுகுறித்து பள்ளிக் கல்வி, விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கூறுகையில், மாரியப்பன் சர்வதேச அளவில் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்க தமிழக அரசு உதவி செய்யும்.
விளையாட்டு துறைக்கு மட்டும் தமிழக அரசு ரூ.104 கோடி ஒதுக்கியுள்ளது. மாரியப்பனுக்கு மத்திய அரசு ரயில்வே துறையில் வேலை வாங்கி தருவதாக கூறியுள்ளது.
மாரியப்பன் கோரிக்கை வைக்கும் பட்சத்தில் குரூப் 1 பணி வழங்க தமிழக அரசு ஏற்பாடு செய்யப்படும் என அவர் தெரிவித்தார்.