பிறந்திருக்கும் இந்த ஆண்டில் 15 இற்கும் மேற்பட்ட சர்வதேச மெய்வல்லுநர் போட்டிகளில் இலங்கை மெய்வல்லுநர் அணியை பங்கேற்பதற்கு எதிர்பார்த்துள்ளதாக இலங்கை மெய்வல்லுநர் சங்கத்தின் தலைவர் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் பாலித்த பெர்னாண்டோ தெரிவித்தார்.
இது குறித்து அவர் கூறுகையில்,
“இலங்கை, இவ்வாண்டின் முதல் போட்டியாக எதிர்வரும் 10 ஆம் திகதியன்று பங்களாதேஷில் நடைபெறவுள்ள பங்கபந்து ஷெயிக் முஜிபுர் ரஹ்மான் அழைப்பு சர்வதேச மரதன் ஓட்டப் போட்டியில் பங்கேற்கிறது. இந்த மரதன் ஓட்டப் போட்டிக்காக இலங்கை மரதன் ஓட்ட வீரர்கள் பயிற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையடுத்து, பொதுநலவாய விளையாட்டு விழா, உலக மெய்வல்லுநர் விளையாட்டு விழா, ஆசிய விளையாட்டு விழா, உலக உள்ளக மெய்வல்லுநர் வல்லவர் போட்டி, ஆசிய கிரோன் ப்ரீ போட்டி, உலக கனிஷ்ட மெய்வல்லுநர் வல்லவர் போட்டி உள்ளிட்ட போட்டிகளில் இலங்கையை பங்கேற்க செய்வதற்கு எதிர்பார்த்துள்ளோம்.
இதில், ஆசிய விளையாட்டு விழா மிக முக்கிய ஓர் போட்டி நிகழ்வாக கருதப்படுகிறது. இதன் மெய்வல்லுநர் போட்டிகளில் 5 பதக்கங்களை இலங்கை கைப்பற்றும் நம்பிக்கை உள்ளது” என்றார்.
இலங்கை மெய்வல்லுநர் சங்கத்தின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அதிகளவான மெய்வல்லுநர் போட்டிகளை நடத்த இலங்கை மெய்வல்லுநர் சங்கம் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]