முல்லைத்தீவு மக்களுக்கு சிறந்த பாதுகாப்பை வழங்கி அவர்களுக்கு இயன்ற வழிகளில் உதவ வேண்டும் என்று இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.
முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்த இராணுவ தளபதி, முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் பணியாற்றும் படையினருக்கான வருடப்பிறப்பு சிறப்புரையில் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதன் போது அவர் மேலும் தெரிவிக்கையில் ,
முல்லைத்தீவு மக்களின் சிறந்த பாதுகாப்பை உறுதிசெய்து, அவர்களுக்கு இயன்ற வழிகளில் உதவ வேண்டும், ஏனெனில் அவர்களில் பெரும்பாலானோர் மீன்பிடித் தொழிலை நம்பி, பல சவால்களுக்கு மத்தியில் வாழ்கின்றனர். எனவே, அவர்களுக்கான சமூக நிவாரணப் பணிகளை மேலும் விரிவுபடுத்த வேண்டும்.
மேலும் முல்லைத்தீவு மக்களை போதைப்பொருள் பாவனை போன்ற சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபட இடமளிக்காமல் பாதுகாக்கும் அதேநேரம், அவர்களுக்கான நிதி உதவிகள், மத ஸ்தலங்களை புனரமைத்தல், விளையாட்டு மைதான வசதிகளை மேம்படுத்தல், பொதுச் சேவைகளை வலுப்படுத்தல் என்பவற்றிற்காக படையினர் முன்னெடுத்து வரும் சேவைகள் பாராட்டத்தக்கது.
ஐ.நா. அமைதிகாக்கும் பணிகளுக்கான பங்களிப்புக்கள், வறிய குடும்பங்களுக்கான வீடுகளை நிர்மாணித்தல் உள்ளிட்ட பணிகளுக்கு ஒத்துழைப்புக்களை வழங்கியதற்காகவும் முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதிக்கு இராணுவத்தளபதி நன்றி கூறினார்.
நாட்டிற்குள் மிகுந்த வரவேற்பை பெற்ற அமைப்பாக இலங்கை இராணுவம் விளங்குவதால் சகலரும் சிறந்த முறையில் கடமைகளை செய்ய வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]