பிரதமர் மோடிக்காக வாங்கப்பட்டுள்ள அதிநவீன பாதுகாப்பு அம்சங்களைக் கொண்ட கார் விலை பற்றிய தகவல்களை மத்திய அரசு வட்டாரங்கள் வெளியிட்டுள்ளன.
பிரதமர் மோடி பயன்படுத்துவதற்காக தலா ரூ.12 கோடி விலையில் ‘மெர்சிடிஸ் மேபேக் எஸ் 650 கார்டு’ ரக கார்கள் இரண்டு வாங்கப்பட்டுள்ளதாக ஊடகங்களில் தகவல்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.
இந்த கார்கள் அதிநவீன பாதுகாப்பு அம்சங்களைக் கொண்டவை ஆகும்.
இதுபற்றிய புதிய தகவல்களை மத்திய அரசு வட்டாரங்கள் நேற்று வெளியிட்டன.
அவை வருமாறு:-
* ஊடகங்களில் வெளிவந்த தகவல்களை விட வாங்கப்பட்டுள்ள கார்களின் விலை மிகவும் குறைவு. கார் விலை ஊடகங்களில் குறிப்பிடப்பட்டுள்ள விலையில் மூன்றில் ஒரு பங்குதான்.
* எஸ்.பி.ஜி. (அதிரடி கமாண்டோ படை) பாதுகாப்பு வரையறையின்படி 6 ஆண்டுகளுக்கு ஒரு முறை பிரதமர் கார் மாற்றப்பட வேண்டும். ஆனால் மோடியின் கார்கள் 8 ஆண்டுகளாக பயன்படுத்தப்பட்டு வந்துள்ளன. இதனால் தணிக்கையின் ஆட்சேபம் வந்துள்ளது. இது பிரதமரின் உயிரோடு சமரசம் செய்வது போன்றது என்ற கருத்தும் வெளியிடப்பட்டது.
* பிரதமருக்கான அச்சுறுத்தல் உணர்வின் அடிப்படையில்தான் பாதுகாப்பான கார் வாங்குவதற்கு முடிவு எடுக்கப்பட்டது. இது தொடர்பாக பிரதமரின் கருத்துகளைப் பெறாமல் எஸ்.பி.ஜி. சுதந்திரமாக முடிவு எடுத்துள்ளது.
* பிரதமர் கார் பாதுகாப்பு அம்சங்கள் பற்றிய பரவலான விவாதம், தேசிய நலனில் இல்லை. ஏனென்றால் இது பொது களத்தில் தேவையற்ற விவாதங்களுக்கு வழிவகுக்கிறது. இது பிரதமரின் உயிருக்கு அச்சுறுத்தலாக மட்டுமே உள்ளது.
* எந்த கார்களை பயன்படுத்த வேண்டும் என்பதில் பிரதமர் மோடி எந்த முன்னுரிமையும் தெரிவிக்கவில்லை.
இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
ஆனால் பி.எம்.டபிள்யு. நிறுவனம் தயாரிக்கும் கார்களைத்தான் பல்லாண்டு காலமாக பிரதமர் பயன்படுத்தி வருவதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]