நாடு வங்குரோத்து நிலைமையை அடைந்தால் எதிர்வரும் 10 ஆண்டுகளுக்கு அந்நிலைமையிலிருந்து மீள முடியாது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சம்பிக ரணவக்க தெரிவித்தார்.
கெட்டம்பே நாயக்க தேரரை சந்தித்து ஆசி பெற்றுக் கொண்ட போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
இலங்கையில் மூளைசாலிகள் அனைவரும் நாட்டை விட்டு வெளியேறுகின்றனர். நாட்டில் தற்போதுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வினை வழங்காவிட்டால் அவர்கள் வெளிநாடுகளுக்குச் சென்று தமது தொழில்வாய்ப்புக்களை அமைத்துக் கொள்வர் என்று வணிக அமைப்புக்கள் எச்சரித்துள்ளன.
அதே வேளை உயர்கல்விக்காக பெரும்பாலான பெற்றோர் தமது பிள்ளைகளை வெளிநாடுகளுக்கு அனுப்புவதால் டொலர் நாட்டிலிலிருந்து வெளியேற்றப்படுகிறது.
எனவே பிரச்சினைகளுக்கு துரித தீர்வு காணப்படாவிட்டால் பஞ்சம் ஏற்படும். டொலர் தட்டுப்பாடு மற்றும் உரப்பிரச்சினையால் ஏற்பட்டுள்ள உணவு தட்டுப்பாடு என்பன அதில் தாக்கம் செலுத்தும். அதே போன்று மின்சாரம், எரிபொருள், மருந்து உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் டொலர் நெருக்கடி பாரிய தாக்கம் செலுத்தும். இன்றும் கூட எரிவாயு, எரிபொருள் மற்றும் நிலக்கரி என்பவற்றை இறக்குமதி செய்வதில் பாரிய சிக்கல் நிலவுகிறது.
ஏதேனுமொரு சந்தர்ப்பத்தில் நீர் மின் உற்பத்தி பாதிக்கப்படுமாயின் , மின் விநியோகத்தடையும் தவிர்க்க முடியாததாகும். எரிபொருள் இறக்குமதிக்கான விலை மனு கோரப்படுகின்ற போதிலும், அதற்கு எவரும் முன்வருவதில்லை. காரணம் இலங்கையின் வங்கி கட்டமைப்பின் மீது நம்பிக்கையற்ற நிலைமை ஏற்பட்டுள்ளது.
தற்போதுள்ள நிலைவரத்தின் அடிப்படையில் சர்வதேச நாணய நிதியத்தை நாடுவதால் பிரச்சினைக்கு தீர்வு காண முடியாது. காரணம் 1987, 2009 மற்றும் 2017 இல் காணப்பட்டதை விட பாரதூரமான நிலைமையிலேயே நாடு தற்போதுள்ளது.
அண்மையில் வெளியிடப்பட்டுள்ள தரப்படுத்தல்களுக்கமைய வங்குரோத்து நிலைமையை அடைவதை தடுக்க முடியாத நிலைமையிலேயே நாம் காணப்படுகின்றோம்.
இவ்வாறான நிலையில் இலங்கையின் துறைமுகங்கள், விமான நிலையம் உள்ளிட்டவற்றை மிகக்குறைந்த விலையில் விற்பனை செய்வதற்கான முயற்சிகளும் முன்னெடுக்கப்படுகின்றன.
இவற்றிலிருந்து மீள்வதற்கான பொதுவான வேலைத்திட்டமொன்றை ஜனவரியில் முன்வைப்பதற்கு நாம் எதிர்பார்த்துள்ளோம். கட்சி பேதமின்றி அனைத்து தரப்பினரிடமும் பாராளுமன்றத்தில் இதனை சமர்ப்பிப்பதற்கு நாம் எதிர்பார்த்துள்ளோம் என்றார்.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]