ஜனவரி மாதம் 18 ஆம் திகதி பாராளுமன்ற அமர்வினை மீள ஆரம்பிக்கும் தினத்தில் 500 மில்லியன் அமெரிக்க டொலர்களை சர்வதேச கடன் தொகையாக செலுத்த வேண்டியுள்ளது.
எனவே சர்வதேச நாணய நிதியத்திற்கு செல்லாது அரசாங்கம் பிடிவாதமாக செயற்பட்டால் நாடு பொருளாதார ரீதியில் பேராபத்தில் விழுந்து விடும். இதனால் மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பு – 7 , 5 ஆம் ஒழுங்கையில் அமைந்துள்ள இல்லத்தில் ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்களை சந்தித்து கலந்துரையாடிய போதே ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் தொடர்ந்தும் கூறுகையில் ,
பாதுகாப்பான பொருளாதாரத்தின் உத்தரவாதத்தை ஐக்கிய தேசிய கட்சியினால் மாத்திரமே உறுதிப்படுத்த முடியம் என்பதை மக்கள் உணர்ந்துள்ளனர்.
எனவே நாட்டிற்கான கடமையை செய்ய வேண்டும். மக்கள் மத்தியில் நம்பிக்கையை கட்டியெழுப்பும் வகையில் செயற்பட வேண்டும். அடுத்து வரும் தேர்தல்களை மையப்படுத்தி இளையோர்களை ஒன்றிணைத்து புதிய திட்டங்களை வகுக்க வேண்டும்.
இளம் சமூகத்தினர் மீண்டும் ஐக்கிய தேசிய கட்சி மீது நம்பிக்கை கொண்டு செயற்பட ஆரம்பித்துள்ளனர். இது முக்கியமான ஒன்றாகும். கிராமங்களுக்கு சென்று மக்களை ஒன்றிணைத்து அனைவரும் செயற்பட வேண்டும்.
அரசாங்கத்தின் பிடிவாதத்தால் மக்களே பாதிக்கப்படுகின்றனர். ஜனவரி மாதம் 18 ஆம் திகதி பாராளுமன்றத்தை ஜனாதிபதி மீள ஆரம்பிக்கும் போது 500 மில்லியன் டொலரை சர்வதேச கடனாக இலங்கை செலுத்த வேண்டும் என்றார்.
இவ்வாறானதொரு நிலையில் சர்வதேச கடன் தவனை கொடுப்பணவாக 2 பில்லியன் டொலர்களுக்கும் அதிகமான தொகையை செலுத்த வேண்டியுள்ளது.
ஆனால் அந்நிய செலாவணி இருப்பாக நாட்டில் 1.5 பில்லியன் டொலர்கள் மாத்திரமே உள்ளன. மறுப்புறம் அரசாங்கத்தின் வருவாய் துறையும் தேசிய உற்பத்தி மற்றும் அதனை சார்ந்த ஏற்றுமதி வருமானம் என்பனவும் எதிர்பார்த்த அந்நிய செலாவணியை பெற்றுக்கொடுக்க வில்லை.
எனவே தான் அத்தியாவசிய பொருட்களுக்கான இறக்குமதியை கூட அரசாங்கம் கட்டுப்படுத்தியுள்ளது. இது அரசாங்கத்தின் மிக மோசமான நிதி நெருக்கடியை வெளிப்படுத்துகின்றது.
இந்த நிலையில் இருந்து மீள்வதற்கு அரசாங்கம் போராடி வருகின்றது. இலங்கைக்கு அவசர உதவிகளை செய்ய கூடிய இந்தியா , சீனா உள்ளிட்ட அரபு நாடுகளிடம் உதவிக்கரம் நீட்டியுள்ளது.
நிதியமைச்சர் பெசில் ராஜபக்ஷவின் அண்மைய இந்திய விஜயத்தின் போதும் நிதி ஒத்துழைப்புகள் குறித்து பேசப்பட்டுள்ளது. இந்தியாவிடமிருந்து 500 மில்லியன் அமெரிக்க டொலர்களை பெற்றுக்கொள்ளும் நோக்கிலேயே நிதியமைச்சர் அங்கு சென்றிருந்தார்.
மறுப்புறம் சீனாவிடம் 1500 மில்லியன் கடனுதவிக்கான கோரிக்கைகள் முன்வைக்கப்பட்ட போதிலும் சாதகமான பதில் கிடைக்க வில்லை. மாறாக அவ்வாறு 1500 மில்லியன் டொலரை வழங்கினாலும் அத்தொகையினை எந்தவொரு தேவைக்கும் பயன்படுத்த கூடாது.
அந்நிய செலாவணி இருப்பை உறுதிப்படுத்தும் வகையிலான ஒப்பந்தத்தின் அடிப்படையில் உதவி செய்ய முடியும் என்ற வகையிலேயே சீனா தரப்பின் பதில்கள் அமைந்துள்ளன. இவ்வாறானதொரு நிலையில் மிக குறுகிய காலத்திற்குள் பெரும் தொகையான டொலர்களை நாட்டுக்கு கொண்டு வரும் போராட்டத்தில் அரசாங்கம் சிக்குண்டுள்ளது.
ஜனாதிபதி மற்றும் பிரதமர் உள்ளிட்ட முழு அரசாங்கமும் இதற்காக செயற்படுகின்றமை வெளிப்பட்டுள்ளது. இறுதி தெரிவாக மத்திய கிழக்கு நட்பு நாடுகளிடம் உதவிப்பெற்றுக்கொள்ளும் வகையில் அவதானம் செலுத்தியுள்ளது.
தற்போதைய நெருக்கடி நிலைமையில் இருந்து மீள்வதற்கு உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியத்திடம் கலந்துரையாடுமாறு ஆலோசனைகள் வழங்கப்படுகின்ற போதிலும் அரசாங்கம்; அந்த தீர்மானத்திற்கு இதுவரையில் வர வில்லை. ஆனால் இறுதி தீர்வாக கூட சர்வதேச நாணய நிதியம் அமையலாம் என்பதும் ஆளும் தரப்பின் சிலரது கருத்தாகின்றமை குறிப்பிடத்தக்கது.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]