தமிழக நகரமான ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அருகே கோரைக்குட்டத்தில் ராஜராஜசோழன் காலகட்டத்து ஈழக்காசுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.
திருப்புல்லாணி அரசினர் பாடசாலையில் உயர்தரத்தில் படிக்கும் மாணவி கு. முனீஸ்வரி, முதலாம் ராஜராஜசோழன் பெயர் பொறித்த மூன்று ஈழ காசுகளை கோரைக்குட்டம் என்ற ஊரில் கண்டெடுத்துள்ளார்.
இந்த காசுகளில் ஒரு பக்கம் கையில் மலர் ஏந்தியவாறு ஒருவர் நிற்பதுபோல் பொறிக்கப்பட்டுள்ளது. மேலும் அவரது இடது பக்கம் நான்கு வட்டங்கள் அமைந்துள்ளன. அவற்றின் மேல் பிறையும் கீழே மலரும் உள்ளன. காசுகளின் வலது பக்கத்தில் திரிசூலம் விளக்கு பொறிக்கப்பட்டுள்ளது. காசுகளின் மறுபக்கம் கையில் சங்கு ஏந்தியபடி ஒருவர் அமர்ந்திருக்கும் அமைப்பும் உள்ளது. சங்கு ஏந்தியவரின் இடது கை அருகே தேவநாகரி எழுத்தில் ‘ஸ்ரீ ராஜராஜ’ என மூன்று வரிகளில் எழுத்துகள் பொறிக்கப்பட்டுள்ளன. இந்த காசுகளில் உள்ளவர் இலங்கை காசுகளில் உள்ள உருவம் பொறிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தொன்மை பாதுகாப்பு மன்ற நிர்வாகிகள் கூறியதாவது…
” இலங்கையை முதலாம் ராஜராஜ சோழன் வெற்றி கொண்டதைக் குறிக்கும் வகையில் ஈழக்காசுகள் உள்ளன. இந்த காசுகள் முதலாம் இராஜராஜன் முதல் முதலாம் குலோத்துங்க சோழன் காலம் வரை பயன்பாட்டில் இருந்திருக்கலாம். கோரைக்குட்டத்தில் கண்டெடுக்கப்பட்ட மூன்று காசுகள் செம்பு உலோகத்தாலானவை. ராமநாதபுரத்தில் பெரியபட்டினம், தொண்டி, களிமன்குண்டு, அழகன் குளம் ஆகிய கடற்கரை பகுதிகளில் ஏற்கனவே ஈழ காசுகள் கிடைத்துள்ளன” என்றனர்.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]