‘ரத்தம் ரணம் ரௌத்திரம்’ என்ற பெயரில் தயாராகி, ஜனவரி மாதம் 7ஆம் திகதியன்று வெளியாகவிருக்கும் திரைப்படம், ‘உணர்வுபூர்வமான காவியம்’ என அப்படத்தின் இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலி தெரிவித்திருக்கிறார்.
DVV என்டர்டெய்ன்மென்ட் என்ற பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் தானய்யா பிரம்மாண்டமான பட்ஜட்டில் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் தயாரித்திருக்கும் புதிய திரைப்படம் ‘ஆர் ஆர் ஆர்’ எனப்படும் ‘ரத்தம் ரணம் ரௌத்திரம்’.
இந்த படத்தில் நடிகர்கள் ஜூனியர் என்டிஆர், ராம்சரண் தேஜா கதையின் நாயகர்களாக முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள்.
இவர்களுடன் பொலிவுட் நடிகர் அஜய் தேவகன், பொலிவுட் நடிகை அலியா பட், சமுத்திரகனி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
கே. கே. செந்தில் குமார் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப் படத்திற்கு, எம். எம். கீரவாணி இசை அமைத்திருக்கிறார்.
இந்த படத்தினை விளம்பரப்படுத்தும் நிகழ்வு சென்னையில் நடைபெற்றது. இதில் படத்தின் இயக்குநர் ராஜமௌலி, படத்தின் கதாநாயகர்கள் ராம்சரண் தேஜா, ஜூனியர் என்டிஆர், படத்தின் நாயகி அலியா பட் உள்ளிட்ட சிலர் பங்குபற்றினர்.
படம் குறித்து இயக்குநர் பேசுகையில்,
“பாகுபலி படத்தில் இடம்பெற்ற உணர்வுபூர்வமான விடயம், இந்த படத்திலும் அதே அளவில் இடம்பெற்றிருக்கிறது. இந்திய சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்ட பழங்குடியின தலைவர் கொமாரம் பீம் என்ற கதாபாத்திரத்திற்கும், அந்த காலகட்டத்தில் பிரித்தானிய காவல்துறையில் பணியாற்றிய சீதா ராம ராஜு என்ற கதாபாத்திரத்திற்கும் உணர்வு ரீதியாகவும், நட்பு ரீதியாகவும் ஒருங்கிணைக்கும் ஒரு படைப்பாக ‘ஆர் ஆர் ஆர்’ உருவாகியிருக்கிறது.
இந்தப் படைப்பில் குறிப்பிடப்படும் இந்த இரண்டு சுதந்திர போராட்டத்திற்கு பாடுபட்ட வீரர்களின் வாழ்க்கை வரலாற்றில், குறிப்பிட்ட காலகட்டத்திற்கு என்ன நடந்தது? என்ற புரியாத புதிர் ஒன்று இடம்பெற்றிருக்கிறது.
அந்த காலகட்டத்தை மையப்புள்ளியாக எடுத்துக்கொண்டு, இவர்கள் இருவரும் நட்பு பாராட்டி இருந்தால்…. எப்படி இருக்கும் என்ற கற்பனையில் உதித்தது தான் இந்த ‘ஆர் ஆர் ஆர்’.
இந்தப்படத்தில் நடிகர்கள் ஜூனியர் என்டிஆர் மற்றும் ராம்சரண் தேஜா ஆகிய இருவரும் இரசிகர்களின் ஏகோபித்த ஆதரவு பெற்ற நட்சத்திரங்களாக இல்லாமல், கதாபாத்திரங்களாக தோன்றுகிறார்கள். இரசிகர்கள் இதனை ஏற்றுக்கொண்டு படத்தை வெற்றிபெற செய்வார்கள் என நம்புகிறேன்” என்றார்.
‘ஆர் ஆர் ஆர்’ என்ற படத்தின் முன்னோட்டத்தில் ராஜமவுலியின் வழக்கமான பிரம்மாண்டமான காட்சி அமைப்புகளும், அதன் ஊடாக ஒளிரும் உணர்வுகளும் இரசிகர்களின் எதிர்பார்ப்பை விட கூடுதலாக இடம் பெற்றிருப்பதால், மில்லியன் கணக்கிலான இரசிகர்கள் இதனை பார்வையிட்டு வெற்றிபெற செய்திருக்கிறார்கள்.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]