யாம் அறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம் என தமிழின் பெருமையை தரணிக்கு எடுத்துரைத்தார்.
கவிதை எழுதுபவர் கவிஞரல்ல; கவிதையை வாழ்க்கையாக உடையவர் மற்றும் வாழ்க்கையையே கவிதையாகப் படைப்பவரே கவிஞர் என கவிக்கு இலக்கணம் சொன்ன மகாகவி பாரதியாரின் 140-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது.
1882-ஆம் ஆண்டு டிசம்பர் 11 அன்று எட்டயபுரத்தில் பிறந்த சுப்பிரமணியன், 7 வயதிலேயே கவிதை எழுதத் தொடங்கினார். 11 வயதில் எட்டயபுர சமஸ்தானத்தில் தன் புலமையை நிரூபித்த சுப்ரமணியனை, பாரதி என பட்டமளித்துப் பாராட்டினார் எட்டயபுர மன்னர்.
1897 ஆம் ஆண்டு பதினான்கரை வயதான பாரதிக்கு 7 வயதான செல்லம்மாவுடன் திருமணம் நடைபெற்றது. 16 வயதில் தன் தந்தையை இழந்த பாரதி 1898 ஆம் ஆண்டு காசிக்குச் சென்றார். அங்கு ஹிந்தி, சமஸ்கிருதம் உள்ளிட்ட மொழிகளைக் கற்றுத் தேர்ந்த அவர், யாம் அறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம் என தமிழின் பெருமையை தரணிக்கு எடுத்துரைத்தார்.
காசியில் வசித்த போதுதான், முறுக்கு மீசை, முண்டாசு என அவரது தோற்றம் மாறியது. பின்னர் எட்டயபுரத்திற்கு திரும்பிய பாரதி, அரசவையில் இரு ஆண்டுகள் பணியாற்றினார். 1904-ஆம் ஆண்டு சென்னைக்கு வந்த பாரதி, சுதேச மித்திரன், சக்ரவர்த்தினி பத்திரிகைகளில் பணியாற்றினார். விவேகானந்தரின் சிஷ்யையான நிவேதிதா தேவியை சந்தித்த பின்னர் பெண்ணுரிமை பற்றிய அவரது சிந்தனை மேலோங்க, பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம் என முழங்கினார்.
1906-ஆம் ஆண்டு இந்தியா பத்திரிகைக்குப் பொறுப்பாசிரியரானார் பாரதி. அவரது எழுத்துகளும், கேலிச்சித்திரங்களும் பிரிட்டிஷாருக்கு பெரும் பிரச்னையாக உருவெடுத்தன. ‘கத்தியின்றி ரத்தமின்றி யுத்தமொன்று வருகுது’ என பாரதி எழுதிய பாடல்கள் மக்களிடையே சுதந்திர உணர்வை ஊட்டின. இதனால், இந்தியா பத்திரிகைக்கு ஆங்கிலேய அரசு கடும் நெருக்கடியை ஏற்படுத்த, பிரெஞ்சு ஆதிக்கத்தில் இருந்த புதுவைக்கு இடம் பெயர்ந்தார் பாரதி.
புதுவையில் இருந்த காலகட்டத்தில் தான் கண்ணன் பாட்டு, குயில் பாட்டு, பாஞ்சாலி சபதம் போன்ற காவியங்களைப் படைத்தார் பாரதி. 1918 ஆம் ஆண்டு புதுவையில் இருந்து வெளியே வந்த பாரதியை ஆங்கிலேய அரசு கைது செய்தது. 34 நாட்கள் சிறைவாசத்திற்குப் பின் தன் மனைவியின் ஊரான கடையத்திற்கு சென்றார் பாரதி.
கடையத்தில் வசித்தபோது வறுமையில் சிக்கிய பாரதி, தனி ஒரு மனிதனுக்கு உணவில்லை எனில் இந்த ஜகத்தினை அழித்திடுவோம் என தன் நிலையையும் கவிதையில் வடித்தார். 1919 ஆம் ஆண்டு சென்னை திரும்பிய பாரதி திருவல்லிக்கேணியில் வசித்து வந்தார். 1921 ஆம் ஆண்டு ஜூலை மாதம், பார்த்தசாரதி கோயில் யானையால் தாக்கப்பட்ட பாரதி உடல்நலம் குன்றினார். தனது 39 வயது வரை வாழ்ந்த பாரதி 1921 செப்டம்பர் 11 அன்று வரலாறாக மாறினார்
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]