சமையல் எரிவாயு சிலிண்டருடன் தொடர்புடைய வெடிப்பு சம்பவங்கள் குறித்து ஆராயும் குழுவினரது அறிக்கைகளை அடிப்படையாகக் கொண்டு பாதிக்கப்பட்டுள்ள நுகர்வோருக்கு நட்டஈடு பெற்றுக் கொடுக்க உரிய நடவடிக்கை முன்னெடுக்கப்படும்.
4 ஆம் திகதிக்கு முன்னர் சந்தைக்கு விநியோகித்துள்ள எரிவாயு சிலிண்டர்களை நிறுவனங்கள் மீள பெற்றுக் கொள்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது என நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்தார்.
நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சில் வியாழக்கிழமை (10) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
சமையல் எரிவாயு சிலிண்டருடனான வெடிப்பு சம்பவம் தொடர்பில் அரசாங்கம் பொறுப்பான நடவடிக்கைளை முன்னெடுத்துள்ளது.
சந்தைக்கு விநியோகிக்கப்படும் எரிவாயு சிலிண்டர்களின் தரம் மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
சிவப்பு நிறத்தில் முத்திரை(சீல்) இடப்பட்ட எரிவாயு சிலிண்டர் வெடிப்பு சம்பவம் ஒரு சில பகுதிகளில் பதிவாகியுள்ளது.
அச்சம்பவம் குறித்து குழுவினரால் பரிசோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.பாதுகாப்பு தரம் உறுதிப்படுத்தப்பட்ட எரிவாயு சிலிண்டர்களில் எரிவாயு கசிவு ஏற்படுவதற்கான காரணம் ஆராயப்படுவது அவசியமாகும்.
சமையல் எரிவாயு சிலிண்டர்களில் எரிவாயு கசிவு ஏற்படும் போது அதனை நுகரும் உணர் திறனை தூண்டும் எதில் மகர்கெப்டன் இரசாயன பதார்த்தம் 14 சதவீத அளவில் சேர்க்கப்பட வேண்டும் என்பதும்,ப்ரோப்பேன்,பியூட்டென் கலவை 70:30 என்ற வீதத்தில் சேர்க்கப்பட வேண்டும் என்பதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இம்மாதம் 4 ஆம் திகதிக்கு முன்னர் சந்தைக்கு விநியோகிக்கப்பட்ட சமையல் எரிவாயு சிலிண்டர்களை நிறுவனங்கள் மீள பெற வேண்டும். எரிவாயு விநியோக முகவர் நிலையங்களில் உள்ள எரிவாயு சிலிண்டர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டிய பொறுப்பு உரிய நிறுவனங்களுக்கு உண்டு.
எரிவாயு சிலிண்டருடனான தொடர்புடைய வெடிப்பு சம்பவங்கள் தொடர்பில் ஆராயும் குழுவினரது அறிக்கைகளை அடிப்படையாகக் கொண்டு பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு நட்டஈடு பெற்றுக் கொடுக்க உரிய நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என்றார்.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]