’என்ன சொல்ல போகிறாய்’ பட ஆடியோ ரிலீஸின்போது ஆவலோடு காத்திருந்தவர்களுக்கு, அப்படத்தின் ஹீரோ அஸ்வின் ’இப்படி சொல்வார்’ என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. “கதை கேட்கும்போது பிடிக்கவில்லையென்றால் தூங்கிவிடுவேன். 40 கதைகள் கேட்டு தூங்கியிருக்கிறேன். ஆனால், நான் தூங்காமல் கேட்ட ஒரே கதை இது மட்டும்தான்” என்று பேசியது சர்ச்சையாகியிருக்கிறது. சமூக வலைதளங்களில் அஸ்வினுக்கு எதிராக ட்ரோல் அம்புகள் மீம்ஸ்களாய் பாய்ந்து கொண்டிருக்கும் சூழலில், அஸ்வினை தொடர்புகொண்டு பேசினோம்,
’கதை கேட்கும்போது பிடிக்கவில்லையென்றால் தூங்கிவிடுவேன்’ என்றது சர்ச்சையாகியிருக்கிறதே?
”என்னோட பேச்சு சீரியஸா பேசின மாதிரியா இருந்துச்சி?. ஆடியோ ரிலீஸின்போது என்ன பேசுறதுன்னு தெரியாம ரொம்ப சந்தோஷத்துல இருந்தேன். வாழ்க்கையில் பெரிய நல்ல விஷயம் நடக்குதுன்னு ஒருவித படபடப்புலயும் மேடை பயத்துலயும் கையெல்லாம் நடுக்கத்தோட நின்னுக்கிட்டிருந்தேன். அப்படியொரு சூழல்ல, எப்படி என்னால ஆணவமாவும் திமிராவும் பேசமுடியும்? நான் யோசிச்சி யோசிச்சி பேசும் ஆள் கிடையாது. முன் தயாரிப்போடவும் போகமாட்டேன். எப்பவும்போல விளையாட்டுத்தனமாக வம்பிழுப்பேன். அப்படித்தான், ‘ஹரி நீ படம் நல்லா பண்ணலைன்னா ரிலீஸ் பண்ண விடமாட்டேன்’ன்னு சும்மா நானும் இயக்குநரும் ஜாலியா பேசிக்கிட்டோம். ’என்ன சொல்ல போகிறாய் ஒரு நல்லக் கதை. மக்களுக்கு நல்ல படம் கொடுக்கிறோம்’ என்று சொல்ல வந்ததைத்தான் மேடையில் ’ரிலீஸ் பண்ண விடமாட்டேன்’ன்னு விளையாட்டுத்தனமா சொல்லிட்டேன். இதனை சரியாக தொடர்புபடுத்திப் பேசாததால் என்னுடைய பேச்சு தவறாக புரிந்துகொள்ளப்பட்டது.
அதேபோல, ’எத்தனைப் படம் பண்றோம்ங்கிறதைத் தாண்டி ஒரு நல்லப் படம் பண்ணனும்… அஸ்வின் நல்ல படத்துல நடிச்சிட்டான்னு எல்லோரும் சொல்லணும்… அதுக்கேத்த மாதிரி நான் கதையும் தேர்வு செய்தேன்’ என்பதுதான் மேடையில் நான் சொல்ல நினைத்த விஷயம். ஆனால், அதனை ‘கதை பிடிக்கலைன்னா தூங்கிடுவேன். 40 கதைகள் கேட்டு தூங்கியிருக்கிறேன்’ என்று ஜாலியா பேசிட்டேன். 40 இயக்குநர்களிடம் கதை கேட்டேன் என்பதில் கணக்கே கிடையாது. அது 50 ஆகவும் இருக்கலாம்; பத்தாகவும் இருக்கலாம். நான்காகவும் இருக்கலாம். இதுவரை எத்தனைக் கதை கேட்டேன் என்ற கணக்கும் தெரியாது. மேடையில் இருக்கும்போது ஒரு குத்துமதிப்பா வாயில, அந்த டைம்ல சும்மா ஒரு விஷயம் சொல்லுவோம்லயா… அப்படி வந்ததுதான் 40 கதைகள். குத்துமதிப்பா சொன்னதை திமிரா சொன்னா மாதிரி எடுத்துக்கிட்டாங்க. ’என் படம்தாண்டா மாஸ். மத்த படம் எல்லாம் தூசு’ என்றெல்லாம் நான் பேசக்கிடையாது. ’என் கதை நல்லக்கதை.. உங்களுக்கும் பிடிக்கும்’ என்பதற்காக வாயில் வந்த 40 நம்பரை அப்படியே சொல்லிட்டேன். அதில், உண்மையே இல்லை. எதார்த்தமா சொன்னது. யாரையும் புண்படுத்தணும்ங்கிற நோக்கம் கிடையாது. ’என்ன சொல்ல போகிறாய் கதை அவ்ளோ பிடித்திருந்தது. மூனு மணிநேரம் போர் அடிக்காம கதை கேட்டேன்’ என்று சொல்ல வந்தது தவறாக புரிந்துகொள்ளப்பட்டது. என்னுடன் இருந்தவர்களுக்கு நான் எந்த அர்த்தத்தில் பேசினேன் என்பது தெரியும்.
பேசிக்கொண்டிருக்கும்போதே ”நான் என்னன்னமோ உளர்றேன். என்ன பேசுறதுன்னே தெரியலை. என்னை மன்னிச்சிடுங்க”ன்னு சொல்லிட்டுதான் மேடையில் இருந்து இறங்கினேன். முழு வீடியோவுலயும் நான் மன்னிப்பு கேட்டது இருக்கும். அப்படி மன்னிப்பு கேட்டும் குறிப்பிட்ட வார்த்தைகளை மட்டும் சர்ச்சையாக்குவதை என்னுடைய கெட்ட நேரமாக எடுத்துக்கிறேன். தவறாக நினைப்பவர்களுக்கு எப்படி புரிய வைக்கிறதுன்னும் தெரியல. நல்ல படங்கள் பண்ணனும். நல்லா சம்பாதிக்கணும். அதிலிருந்து, வர்றதை எல்லோரும் உதவிகள் செய்யணும்னு நினைச்சிதான் சினிமாவுக்கு வந்தேன். இன்னும் சினிமாவில் சாதிக்கவே இல்லை. அப்படி இருக்கும்போது எப்படி ஆணவத்தில் பேசியிருப்பேன்? அப்படியே, சாதிச்சாலும் எனக்கு ஆணவம்ங்கிறது எப்பவுமே வர்றாது. நான் திமிர் பிடித்தவனும் இல்லை”.
சமூக வலைதளங்களில் ட்ரோல் செய்வதை பார்த்தீர்களா? எப்படி எடுத்துக்கொண்டீர்கள்?
”நேற்றிரவிலிருந்து நண்பர்கள் பலரும் மீம்ஸ்களை அனுப்பி ’அஸ்வின் நீ யாரு… எப்படிப்பட்டவன் என்பது எங்களுக்குத் தெரியும். நீ பேசினதை தப்பா புரிஞ்சிக்கிட்டாங்க. கவலைப்படாதடா’ என்று ஆறுதல் கூறினார்கள். அந்த மீம்ஸ்களையெல்லாம் பார்த்து எனக்கு மிகவும் வருத்தமாக இருக்கிறது. உண்மையிலேயே அந்த அர்த்தத்தில் பேசியிருந்தால் வருத்தப்படுவேனா? நான் சொன்னது தவறாக புரிந்துகொள்ளப்பட்டதே என்ற வருத்தம்தான். அதேசமயம், யாரைத்தான் ட்ரோல் பண்ணாம இருக்காங்கன்னும் எடுத்துக்கிறேன். எனக்கு எந்த பேக்ரவுண்டும் கிடையாது. பத்து வருடங்கள் கஷ்டப்பட்டிருக்கேன். என்னை எவ்ளோ அசிங்கமாக ட்ரீட் பண்ணிருக்காங்கன்னு எனக்குத்தான் தெரியும். அதையெல்லாம் கடந்துதான் வந்திருக்கேன். இதையெல்லாம் ஆடியோ ரிலீஸ்ல சொல்லிருக்கலாம். ஆனால், என் சொந்தக் கதை சோகக்கதையை ஏன் சொல்லணும்?. ’என் கனவு நிறைவேறிடுச்சி. சந்தோஷமா இருக்கேன். எல்லோரும் வந்திருக்கீங்க… எனக்கு அந்த சந்தோஷம் போதும்’ என்பதும் ’இயக்குநரின் அற்புதமான கதை குறித்தும் பேசவேண்டும்’ என்பதுதான் நோக்கமாக இருந்தது. அந்த நோக்கத்தைத்தான் தவறான முறையில் சொல்லி தவறாக புரிந்துகொள்ளப்பட்டது. என் வாயில் எப்படி வந்தது என்பதும் தெரியாது.
இப்படி நடப்பது எனக்கு முதல்முறை அல்ல. என் பர்சனல் வாழ்க்கையிலேயே பலமுறை நடந்திருக்கு. நண்பர்கள்கிட்டப் பேசும்போதுகூட ‘ஏண்டா என்னை திட்டுற’ என்பார்கள். ‘திட்டலடா விளையாட்டுக்குத்தான் சொல்றேன்’ என்று புரிய வைத்திருக்கிறேன். அப்படித்தான், ஜாலியா பேசிட்டேன். ஆனால், என் ரசிகர்கள் என்னை விட்டுக்கொடுக்க மாட்டார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. அதேசமயம், என்னால் என் மொத்த டீமும் பாதிக்கப்படக்கூடாது. என்னைவிட இந்தப் படத்திற்காக என் இயக்குநர் உட்பட அனைவரும் அதிகமாக உழைப்பை கொட்டியிருக்கிறார்கள். ஒவ்வொருவரும் கனவுகளுடன் கஷ்டப்பட்டு உழைத்திருக்கிறார்கள். இத்தனைப் பேரின் வாழ்க்கையும் என் ஒருவனால் வீணாகக்கூடாது என்ற எண்ணமே ஓடிக்கொண்டிருக்கிறது. என் தயாரிப்பாளர் கோடிக்கணக்கில் செலவு செய்துள்ளார். அவரது பிள்ளை மாதிரி பார்த்து பார்த்து பண்ணிருக்கார். அவருக்கு எந்த கஷ்டமும் மன உளைச்சலும் வந்துடக்கூடாதுன்னு கடவுளை நம்புறேன். நான் ஆணவம் பிடிச்சவன் கிடையாதுன்னு மக்கள் புரிஞ்சிக்கிட்டாப் போதும்”
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]