ஒமிக்ரோன் திரிபின் வீரியம் தொடர்பான விஞ்ஞானபூர்வ ஆதாரங்கள் கிடைக்கப்பெறும் வரையிலும் அதுபற்றி உலகம் பொதுவான அபிப்பிராயமொன்றுக்கு வரும்வரையிலும் நாம் காத்திருக்கமுடியாது. எத்தகைய வைரஸ் பரவலானாலும் அதனை எதிர்கொள்வதற்கான முற்பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியமாகும்.
அந்தவகையில் ஒமிக்ரோன் திரிபு குறித்து தற்போது காணப்படும் மட்டுப்படுத்தப்பட்டளவிலான தகவல்களை அடிப்படையாகக்கொண்டு அதனைக் கையாள்வதற்கான செயற்திட்டங்கள் உடனடியாக வகுக்கப்படவேண்டும் என்று சுகாதாரக்கொள்கைகளுக்கான நிலையத்தின் தலைவர் வைத்தியநிபுணர் ரவீந்திர ரன்னன் எலிய வலியுறுத்தியுள்ளார்.
கொவிட் – 19 வைரஸின் ஏனைய திரிபுகளுடன் ஒப்பிடுகையில் ஒமிக்ரோன் திரிபு மிகவும் வீரியம்கூடியது என்பது இன்னமும் உறுதிப்படுத்தப்படாத அதேவேளை, நாட்டின் சனத்தொகையில் பெருமளவானோர் முழுமையாகத் தடுப்பூசி பெற்றிருக்கின்ற சூழ்நிலையில் வெளிநாட்டவர்கள் நாட்டிற்குள் நுழைவதைத் தடைசெய்தல் மற்றும் அவர்களுக்கான சுகாதாரப்பாதுகாப்புக் கட்டுப்பாடுகளை மேலும் வலுப்படுத்துதல் உள்ளடங்கலாக விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டியதன் அவசியம் தொடர்பில் டுவிட்டர் பக்கத்தின் ஊடாகத் தெளிவுபடுத்துகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இதுபற்றி அவர் மேலும் கூறியிருப்பதாவது,
ஒமிக்ரோன் வைரஸ் வீரியம்கூடியது என்பதற்கான ஆதாரங்கள் இல்லை என்று கூறமுடியாது. மாறாக அதற்கான மட்டுப்படுத்தப்பட்டளவிலான ஆதாரங்கள் உள்ளன. மட்டுப்படுத்தப்பட்ட ஆதாரங்களைக் கொண்டிருத்தல் என்பது சந்தேகத்திற்குரிய, நிலையற்ற தன்மைக்கு ஒப்பானதாகும்.
ஆகவே முற்பாதுகாப்பு நடவடிக்கைகள் மூலம் அத்தகைய நிலையற்ற தன்மையினால் ஏற்படக்கூடிய அச்சுறுத்தல்களை சமநிலைக்குக் கொண்டுவரவேண்டும். சீனாவின் வூஹானில் கடந்த 2020 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் காணப்பட்ட நிலை தொடர்பில் அவதானம் செலுத்தவேண்டும்.
அங்கு வைரஸ் பரவ ஆரம்பித்து சில வாரங்கள் வரையில் குறித்த வைரஸ் மனிதரிலிருந்து மனிதருக்குப் பரவும் என்பதற்கான ஆதாரங்கள் காணப்படவில்லை. அதன் காரணமாக முழுமையான ஆதாரங்கள் கிடைக்கப்பெறும் வரையில் உலக சுகாதார ஸ்தாபனத்தினால் உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை.
ஆனால் உலக சுகாதார ஸ்தாபனத்தையும் விஞ்ஞானிகளையும் திருப்திப்படுத்தும் வகையிலான அனைத்து ஆதாரங்களும் கிடைத்தபோது, அது மிகத்தாமதமாகியிருந்தது. அதற்குள் வைரஸ் உலகநாடுகள் அனைத்திலும் பரவியது.
முகக்கவசம் அணிதல் மற்றும் தொற்றை உறுதிசெய்வதற்கான பரிசோதனைகளை முன்னெடுத்தல் ஆகிய இருவிடயங்களிலும் அதனையொத்த தவறுகள் இடம்பெற்றன.
எனவே நாம் முற்றுமுழுதாக ஓர் விஞ்ஞானரீதியான கேள்வியுடன் போராடிக்கொண்டிருக்கமுடியாது. பொதுவான அபிப்பிராயமொன்றுக்கு வரும்வரையில் நாம் காத்திருக்கமுடியாது.
எத்தகைய வைரஸ் பரவலானாலும் அதனை எதிர்கொள்வதற்கான முற்பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியமாகும்.
தற்போது ஒமிக்ரோன் திரிபின் வீரியம் குறித்து மட்டுப்படுத்தப்பட்டளவிலான தகவல்கள் வெளியாகியுள்ளன.
எனினும் அந்தத் திரிபு தொடர்பில் நாம் முழுமையாகத் தெரிந்துகொள்வதற்கு முன்னதாக இப்போதே அதனைக் கையாள்வதற்கான வழிமுறைகளை இனங்கண்டு, அதற்கேற்றவாறான செயற்திட்டங்களை வகுக்கவேண்டும்.
இவ்வருடம் கொவிட் – 19 வைரஸ் பரவலைக் கையாள்வதில் எமது நாடு பின்பற்றிய கொள்கைகளின் விளைவாக மக்களின் வாழ்வாதாரம் ஏற்கனவே மிகமோசமாகப் பாதிக்கப்பட்டிருக்கின்றது.
முறையற்ற ஆலோசனைகளை வழங்கியவர்களும் வைரஸ் பரவலின் தீவிரத்தைக் கருத்திற்கொள்ளாதவர்களுமே அதற்குப் பொறுப்பாளிகளாவர். அதுமாத்திரமன்றி இது தற்போதைய அரசாங்கத்தினதும் அதன் நிர்வாகத்தினதும் முழுமையான தோல்வியாகும் என்று குறிப்பிட்டுள்ளார்.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]