பிரபல பாலிவுட் நடிகை பிரீத்தி ஜிந்தா, வாடகைத் தாய் மூலம் இரட்டை குழந்தைக்கு தாயானதற்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
பிரபல இந்தி நடிகை பிரீத்தி ஜிந்தா. இவர் மணிரத்னம் இயக்கிய “தில் சே” படத்தில் அறிமுகமாகி முன்னணி கதாநாயகியாக உயர்ந்தார். தில் சே படம் தமிழில் உயிரே என்ற பெயரில் வெளியானது. பாலிவுட்டில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.
கிரிக்கெட்டில் அதிக ஆர்வம் கொண்ட பிரீத்தி ஜிந்தா, ஐ.பி.எல். கிரிக்கெட் பஞ்சாப் அணியின் உரிமையாளர்களுள் ஒருவராக இருக்கிறார். பிரீத்தி ஜிந்தா கடந்த 2016-ம் ஆண்டு அமெரிக்காவை சேர்ந்த ஜீன் குட்எனப் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
தற்போது 46 வயதாகும் பிரீத்தி ஜிந்தா வாடகைத்தாய் மூலம் இரட்டை குழந்தைகளைப் பெற்றுள்ளார். அந்த குழந்தைகளுக்கு ஜெய் ஜிந்தா, ஜியா ஜிந்தா என்று பெயர் வைத்துள்ளார். சமூக வலைத்தளத்தில் பிரீத்தி ஜிந்தா வெளியிட்டுள்ள பதிவில், ‘‘நானும், கணவர் ஜீனும் மகிழ்ச்சியில் உள்ளோம், எங்கள் இதயங்கள் நன்றியுணர்வுடன் நிரம்பியுள்ளன. எங்கள் இரட்டை குழந்தைகளை குடும்பத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம்.
எங்கள் வாழ்க்கையில் இது புதிய கட்டம். உற்சாகமாக இருக்கிறோம். மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் எங்கள் வாடகை தாய்க்கு நன்றி” என கூறியுள்ளார். பிரீத்தி ஜிந்தாவுக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]