அவுஸ்திரேலியாவுக்கு எதிராக ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள இருபதுக்கு 20 உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் நியூஸிலாந்து விக்கெட் காப்பாளர் டெவன் கொன்வோய் விளையாடமாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இந்தியாவுக்கு எதிரான தொடரிலும் அவர் விளையாடமாட்டார் என நியூஸிலாந்து அணி முகாமைத்துவம் அறிவித்துள்ளது.
இங்கிலாந்துக்கு எதிராக புதன்கிழமை நடைபெற்ற இருபதுக்கு 20 உலகக் கிண்ண முதலாவது அரை இறுதி ஆட்டத்தில் நியூஸிலாந்தின் வெற்றியில் முக்கிய பங்களாற்றியவர்களில் ஒருவரான டெவன் கொன்வோயின் கையில் சுண்டு விரல் பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது.
வியாழனன்று நடத்தப்பட்ட எக்ஸ் ரே பரிசோதனையில் இது உறுதிசெய்யப்பட்டது. இப்போதைக்கு அவர் தொடர்ந்து விளையாடமாட்டார் என தலைமைப் பயிற்றுநர் கெறி ஸ்டெட் தெரிவித்தார்.
‘நியூஸிலாந்து அணிக்காக விளையாடுவதை மேலானது என டெவன் கொன்வே கருதுகின்றார். எனினும் இருபதுக்கு 20 உலகக் கிண்ணத்தில் தொடர்ந்து விளையாட முடியாமல் போனதையிட்டு மிகவும் வேதனையும் ஏமாற்றமும் அடைந்துள்ளார்.
எனவே அவருக்கு ஆறுதல் அளிக்க நாங்கள் அனைவரும் முயற்சித்துவருகின்றோம்’ என கெறி ஸ்டெட் கூறினார்.
இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் 46 ஓட்டங்களைப் பெற்ற டெவன் கொன்வோய், ஆட்டநாயகன் டெரில் மிச்செலுடன் 3ஆவது விக்கெட்டில் 82 ஓட்டங்களைப் பகிர்ந்து நியூஸிலாந்தின் வெற்றியில் பங்காற்றியிருந்தார்.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]