பாலகோட் விமான தாக்குதல் சம்பவத்தில், பாகிஸ்தான் நவீன போர் விமானத்தை சுட்டு வீழ்த்திய அபிநந்தனுக்கு குரூப் கேப்டன் பதவி வழங்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் 2019 பிப்ரவரி 14-ம் தேதி புல்வாமாவில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40 ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். இதற்குப் பதிலடியாக இந்திய போர் விமானங்கள் பாகிஸ்தானில் புகுந்து பாலகோட் என்ற பகுதியில் பயங்கரவாதிகளின் முகாம்களை குண்டுகள் வீசி அழித்தன.
பாகிஸ்தான் எல்லைக்குள் இந்திய விமானங்கள் நுழைந்த கோபத்தில் பாகிஸ்தான் இந்திய எல்லைக்குள் தாக்குதல் நடத்த திட்டமிட்டது. அதன்படி எஃப்-16 ரக விமானம் மூலம் இந்தியா எல்லைக்குள் ஊடுருவ முயன்றது.
அப்போது இந்திய எல்லையில் தயாராக இருந்த இந்திய விமானப்படை, பாகிஸ்தான் திட்டத்தை முறியடித்தது. இந்திய போர் விமானங்கள் பாகிஸ்தான் விமானத்தை விரட்டி அடித்தது. இந்திய வீரர் அபிநந்தன் மிக்-21 வகை போர் விமானத்தைக் கொண்டு, பாகிஸ்தானின் எஃப்-16 நவீன போர் விமானத்தை கண்ணிமைக்கும் நேரத்தில் சுட்டு வீழ்த்தினார்.
பின்னர் பாகிஸ்தான் எல்லைக்குள் நுழைந்ததால் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது. பாராசூட் மூலம் குதித்து உயிர்தப்பிய அபிநந்தன், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் எல்லைக்குள் விழுந்தார். கிராம மக்கள் அவரை தாக்கிய நிலையில், பாகிஸ்தான் ராணுவம் கைது செய்தது.
இந்திய அரசு, உலக நாடுகள் உதவியுடன் பேச்சுவார்த்தை நடத்தி அபிநந்தனை மீட்டது. பாகிஸ்தானின் அதிநவீன விமானத்தை சுட்டு வீழ்த்திய அபிநந்தன் ஹீரோவாக கருதப்பட்டார். சில நாட்கள் ஓய்வில் இருந்த அபிநந்தன் மீண்டும் பணிக்கு திரும்பினார்.
இந்த நிலையில் அபிநந்தனுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. விங் கமாண்டராக இருந்த அபிநந்தன் குரூப் கேப்டனாக பதவி உயர்வு பெற்றுள்ளார்.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]