விராத் கோஹ்லி தலைமையிலான இந்தியாவுக்கு எதிராக துபாய் விளையாட்டரங்கில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற குழு 2க்கான சுப்பர் 12 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் ட்ரென்ட் போல்டின் பந்துவீச்சின் உதவியதுடன் நியூஸிலாந்து 8 விக்கெட்களால் அமோக வெற்றியீட்டியது.
இப் போட்டியில் அடைந்த தோல்வியுடன் இந்தியா அரை இறுதிக்குச் செல்வது சந்தேகத்துக்கு இடமாகியுள்ளது. சுப்பர் 12 சுற்றுக்கான தனது ஆரம்பப் போட்டியில் பாகிஸ்தானிடமும் இந்தியா தோல்வி அடைந்திருந்தது.
பாகிஸ்தானிடம் நியூஸிலாந்தும் தோல்வி அடைந்திருந்தது.
துடுப்பாட்டத்திலும் பந்துவீச்சிலும் எமது அணி சிறப்பாக விளையாடியதென்று தன்னால் கூறமுடியாது என போட்டி முடிவில் இந்திய அணித் தலைவர் விரோத் கோஹ்லி தெரிவித்தார்.
இதேவேளை தமது அணியின் வெற்றியை நியூஸிலாந்து அணித் தலைவர் பெரிதும் பாராட்டினார்.
ட்ரென்ட் போல்டும் இஷ் சோதியம் தங்களிடையே 5 விக்கெட்களைப் பகிர்ந்து இந்தியாவை துவம்சம்செய்திருந்தனர்.
இன்றைய போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தியா 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 110 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.
பலம்வாய்ந்த துடுப்பாட்ட வரிசையைக்கொண்ட இந்திய அணியில் 7ஆம் இலக்க வீpரர் ரவிந்த்ர ஜடேஜா அதிகப்பட்சமாக ஆட்டமிழக்காமல் 26 ஓட்டங்களைப் பெற்றார்.
ரவிந்த்ர ஜடேஜாவைவிட ஹார்திக் பாண்டியா மாத்திரமே (23) இருபது ஓட்டங்களுக்கு மேல் பெற்றார்.
இந்திய அணியில் அதிரடிக்கு பெயர்பெற்ற கே.எல்.ராகுல் (18), இஷான் கிஷான் (4), ரோஹித் ஷர்மா (14), அணித் தலைவர் விராத் கோஹ்லி (9) ரிஷாப் பன்ட் (12) ஆகய அனைவருமே நியூஸிலாந்தின் பந்துவீச்சுக்கனை எதிர்கொள்ள முடியாமல் குறைந்த ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தனர்.
நியூஸிலாந்து பந்துவீச்சில் ட்ரென்ட் போல்ட் 20 ஓட்டங்களுக்கு 3 விக்கெடகளையும் இஷ் சோதி 17 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
111 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து 2 விக்கெட்களை மாத்திரம் இழந்து 112ஓட்டங்களைப் பெற்று அமோக வெற்றியீட்டியது.
மார்ட்டின் கப்டில் 20 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்த பின்னர் டெரில் மிச்செல், அணித் தலைவர் கேன் வில்லியம்சன் ஆகிய இருவரும் 2ஆவது விக்கெட்டில் 72 ஓட்டங்களைப் பகிர்ந்து நியூஸிலாந்தின் வெற்றியை சுலபமாக்கினர்.
மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடிய டெரில் மிச்செல் 4 பவுண்ட்றிகள், 3 சிக்ஸ்களுடன் 49 ஓட்டங்களைக் குவித்தார். கேன் வில்லியம்சன் 33 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காதிருந்தார்.