சூப்பர் 12 சுற்றில் சனிக்கிழமை நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் நடப்பு சம்பியனான மேற்கிந்தியத்தீவுகளை தோற்கடித்து 2021 ஐ.சி.சி. டி-20 உலகக் கிண்ணத்தில் தனது முதல் ஆட்டத்தை இங்கிலாந்து வெற்றிகரமாக ஆரம்பித்துள்ளது.
டுபாய் சர்வதேச மைதானத்தில் ஆரம்பமான 2021 ஐ.சி.சி. ஆண்களுக்கான டி-20 உலகக் கிண்ணத்தின் 14 ஆவது போட்டியில் பொல்லார்ட் தலைமையிலான மேற்கிந்தியத்தீவுகள் மற்றும் இயன் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணிகள் மோதின.
போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து, முதலில் துடுப்பெடுத்தாடும் வாய்ப்பினை மேற்கிந்தியத்தீவுகளுக்கு வழங்கியது.
இந்த போட்டி மே.இ.தீவுகளின் திறமைக்கும் அற்புமான இங்கிலாந்து அணியினரின் பந்து வீச்சு தாக்குதலுக்கும் இடையே ஒரு பலத்த யுத்தமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது,
ஆனால் 2016 இல் இறுதிப் போட்டியில் இங்கிலாந்தை தோற்கடித்த மே.இ.தீவுகள், எதிரணியின் பந்து வீச்சுகளுக்கு முகங்கொடுக்கத் தெரியாது 14.2 ஓவர்களை மாத்திரம் எதிர்கொண்டு 55 ஓட்டங்களுக்குள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தனர்.
பந்து வீச்சில் அசத்திய அடில் ரஷித் 4 விக்கெட்டுகளையும், மொய்ன் அலி மற்றும் டைமல் மில்ஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், கிறிஸ் வோக்ஸ் மற்றும் கிறிஸ் ஜோர்தன் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளனர்.
56 ஓட்டம் என்ற இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து 8.2 ஓவரில் 4 விக்கெட்டுகளை இழந்து வெற்றி பெற்றது.
மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான 56 ஓட்டம் என்ற இலக்கை துரத்துவதில் இங்கிலாந்து தொடக்க ஆட்டக்கரர்களுள் ஒருவரான ஜேசன் ரோய் 11 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.
அதன் பின் வந்த ஜோனி பெயர்ஸ்டோ ஒன்பது ஓட்டங்களுடன் வெளியேறினர், தொடர்ந்து மொய்ன் அலி 3 ஓட்டங்களுடனும், லிவிங்ஸ்டன் ஓரு ஆட்டத்துடனும் ஆட்டமிழந்தனர்.
எனினும் ஜோஸ் பட்லர் 24 ஓட்டங்களுடனும், இயன் மோர்கன் ஒரு ஓட்டத்துடனும் ஆட்டமிழக்காதிருந்து அணியின் வெற்றியை உறுதிபடுத்தினர்.
போட்டியின் ஆட்டநாயகனாக மொய்ன் அலி தெரிவானார்.
இதேவேளை நேற்று பிற்பகல் அபுதாபியில் இடம்பெற்ற மற்றொரு 2021 ஐசிசி டி-20 உலகக் கிண்ண ஆட்டத்தில் தென்னாபிரிக்க அணியை 5 விக்கெட்டுகளினால் வீழ்த்தியது அவுஸ்திரேலியா.
முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்கா 20 ஓவர்களில் நிறைவில் 9 விக்கெட்டுகளை இழந்து 119 ஓட்டங்களை பெற, அவுஸ்திரேலிய அணி 19.4 ஓவரில் 5 விக்கெட்டுகளை இழந்து 121 ஓட்டங்களை பெற்ற வெற்றியிலக்கை கடந்தது.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]