இலங்கையிலிருந்து முதல் விமானம் வந்ததைத் தொடர்ந்து உத்தரபிரதேசத்தின் குஷிநகரில் நிர்மாணிக்கப்பட்டுள்ள புதிய சர்வதேச விமான நிலையத்தை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்துள்ளார்.
புத்தபிரான் மகாபரிநிர்வானா அடைந்த இடத்தைப் பார்வையிட வரும் உள்நாட்டு மற்றும் சர்வதேச யாத்ரீகர்களுக்கு வசதியாக இது அமைவதுடன், உலகெங்கும் உள்ள புத்தரின் யாத்திரைத் தலங்களை இணைக்கும் வகையிலும் செயல்படும்.
இந்த வரலாற்று சிறப்புமிக்க சந்தர்ப்பத்தில் முதலாவது விமான நிலையம் இலங்கையிலிருந்து வருகை தருமாயின் அது குறித்து பெரும் மகிழ்ச்சியடைவதாக இந்திய பிரதமர் இதற்கு முன்னதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் தெரிவித்திருந்தார்.
அதற்கமைய குஷிநகர் விமான நிலையம் சர்வதேச விமான நிலையமாக பிரகடனப்படுத்தப்படுவதை குறிக்கும் வகையில் இலங்கையிலிருந்து புறப்பட்டு சென்றுள்ள ஸ்ரீலங்கன் ஏயர்லைன்ஸ் விமானம் முதலாவதாக அங்கு தரையிறக்கப்பட்டுள்ளது.
இந்த வரலாற்று சிறப்புமிக்க பயணத்தில் புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் என்ற ரீதியில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் எண்ணக்கருவிற்கமைய அஸ்கிரி பீடத்தின் அனுநாயக்கர் வெண்டருவே உபாலி தேரர் உள்ளிட்ட மஹாசங்கத்தினர் நூறு பேர் பங்கேற்றுள்ளனர்.
விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஸ்ரீலங்கன் விமான சேவையின் தலைவர் அசோக் பதிரகே உள்ளிட்ட தூதுவர்கள் இவ்விஜயத்தில் இணைந்து கொண்டுள்ளனர்.
டெல்லியில் இருந்து குஷிநகருக்கு நேரடி விமானங்கள் நவம்பர் 26 முதல் தொடங்கும் என்று இந்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியா இதன்போது கூறியுள்ளார்.
டிசம்பர் 18 முதல் குஷிநகர் மும்பை மற்றும் கொல்கத்தாவுடன் நேரடி விமானங்கள் மூலம் இணைக்கப்படும்.
இந்திய விமான நிலைய ஆணையம் குஷிநகர் சர்வதேச விமான நிலையத்தை 3600 சதுர மீட்டர் பரப்பளவில் புதிய முனைய கட்டிடத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]