நடப்பு ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் நேற்று அபுதாபியில் நடைபெறற ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் மோதின.
நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்று துடுப்பாட்டத்தை மும்பை இந்தியன்ஸ் அணி தெரிவு செய்தது.
அதன்படி மும்பை அணி அதிரடியாக ஆடி 9 விக்கெட் இழப்பிற்கு 235ஓட்டங்களை குவித்தது.
இசான் கிஷான் பந்துகளை பவுண்டரிகள் மற்றும் சிக்சர்களாக பறக்க விட்டு 32 பந்தில் 84 ஓட்டங்களை குவித்து ஆட்டமிழந்தார். இதேபோல் சூர்யகுமார் யாதவும் 40 பந்தில் 82 ஓட்டங்களை அதிரடியாக பெற்றுக்கொடுத்தார்.
ஐதராபாத் அணி தரப்பில் ஜேசன் ஹோல்டர் 4 விக்கெட் வீழ்த்தினார். ரஷித் கான், அபிஷேக் சர்மா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
இதையடுத்து 236 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஐதராபாத் அணி களமிறங்கியது. ஆரம்ப ஆட்டக்காரர்கள் பொறுப்பாக ஆடினர். ஜேசன் ராய் 34 ஓட்டங்களுடனும் அபிஷேக் சர்மா 33 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர்.
அடுத்து இறங்கிய அணித் தலைவர் மனீஷ் பாண்டே பொறுப்புடன் ஆடி அரை சதமடித்தார். ஏனையவர்கள் விரைவில் ஆட்டமிழந்தனர்.
இறுதியில், ஐதராபாத் அணி 8 விக்கெட் இழப்புக்கு 193 ஓட்டங்களை மாத்திரமே எடுத்தது, மனீஷ் பாண்டே 69 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார். இதனால் மும்பை அணி 42 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
மும்பை அணி சார்பில் பும்ரா, கவுல்டர் நைல், நீஷம் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இந்தப் போட்டியில் மும்பை வெற்றி பெற்றாலும் அதன் பிளே ஓப் கனவு தகர்ந்தது.