இயற்கையோடு மட்டுமே இணைந்த ஒரு வாழ்க்கையை நமது முன்னோர்கள் வாழ்ந்தனர். இன்று பறவைகள், மிருகங்கள் மட்டுமே இது போல இயற்கையுடன் இணைந்த வாழ்க்கையை வாழ்கின்றன. நாம் அந்த வாழ்க்கையை இழுந்துவிட்டோம் என்றே கூற வேண்டும். அதிகாலையில் எழுந்து குனிந்து நிமிர்ந்து வேலை செய்யும் பழக்கம் இன்று இல்லை.
கொரோனா பேரிடர் work from home என்பதை கொண்டு வந்துவிட்டது. மாணவர்கள் மற்றும் கல்வி தொடர்பான கற்பித்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்ட அனைவருமே வீட்டில்தான். இதனால் நமது காலை பொழுது என்பதே காலை 10–11 மணி என்றாகிவிட்டது.
எழும் போதே நமது கையில் கண்டிப்பாக கைப்பேசிகள் இருக்கும். முகம் பார்ப்பதற்கு பதிலாக முதலில் முகப்புத்தகம் காலை தேநீருக்கு பதில் வாட்ஸ் அப் இப்படி தொடங்கும் நமது பொழுது பின்னர் அன்றைய இரவு பொழுதை கைப்பேசியோடு நகர்த்தும். இரவு பெற்றறி தீர்ந்து கைப்பேசி கண் அயர்ந்தாலும் அதனை நாம் விடாது, மின் ஏற்றிக்கொண்டே தொடர்ந்து பாவிப்போம்.
இதனால் கைப்பேசியை விட நமக்குதான் பாதிப்பு என்றாலும் இதனை நாம் உணர்வதில்லை. கைப்பேசி நம்மோடு ஒட்டி உறவாட காரணம் என்னவென்றால், சமூகவலைத்தளங்கள்தான். ஆம் இன்று ‘ஸ்மார்ட் போன்’ இல்லாதவர்களை விரல் விட்டு எண்ணும் அளவுக்கு எல்லோரும் ஸ்மார்ட் போன் பாவிக்கின்றனர். அதற்கு காரணம் சமூகலைத்தளங்களில் உலாவ வேண்டும் என்ற ஆசையே. அந்த ஆசை இன்று அவர்களை அடிமையாக்கி வைத்துள்ளது என்பதை யாரும் அறிவதில்லை சாப்பாடு , நித்திரை என்ற எல்லாமே இன்று பேஸ்புக் என்று வாழும் நிலைமைக்கு மக்கள் சென்றுவிட்டனர்.
இந்நிலையில் நேற்று உலகம் முழுவதும் பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் ஸ்தம்பித்து போயின. ஆம், உலகின் முன்னணி சமூக வலைதள நிறுவனமான பேஸ்புக் வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம், மெசஞ்சர் என பல்வேறு செயலிகளை நிர்வகித்து வருகிறது. உலகம் முழுக்க பேஸ்புக் சேவையை சுமார் 285 கோடி வாடிக்கையாளர்களும், வாட்ஸ்அப் செயலியை சுமார் 200 கோடி வாடிக்கையாளர்களும், இன்ஸ்டாகிராமை சுமார் 138 கோடி வாடிக்கையாளர்களும் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று இரவு 9 மணியளவில் பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் மற்றும் மெசஞ்சர் சேவைகள் திடீரென முடங்கின. சேவை முடங்கியதை அறியாத பயனர்கள் தங்களின் ஸ்மார்ட்போனில் கோளாறு ஏற்பட்டது என நினைத்து பல்வேறு அமைப்புகளை மாற்றி சோதனை செய்தனர். மற்றும் டே்டா தீர்ந்துவிட்டதா என மீள் நிரப்பியவர்களும் பலர். இந்நிலையில் பலர் செயலிகள் இயங்காததை டுவிட்டர் போன்ற சமூக வலைதளங்களில் பதிவிட்டனர்.
பின் சில நிமிடங்களில் #sarwardown (சர்வர் டவுன்) எனும் ஹேஷ்டேக் டுவிட்டரை ஆக்கிரமித்தது. இதைத் தொடர்ந்து வாட்ஸ்அப் நிறுவனம், தங்களின் வலைதளம் முடங்கி இருப்பதாக அறிவித்தது. இதே போன்று மற்ற தளங்களும் இந்த தகவலை வெளியிட்டன.
‘முடங்கிய சேவை திரும்ப செயல்படுத்துவதற்கான நடவடிக்கை எடுத்திருக்கிறோம். விரைவில் சரியாகி விடும்’ என பேஸ்புக் அறிவித்தது. எனினும், நீண்ட நேரம் இந்த பிரச்சினை சரியாகவே இல்லை. இன்று அதிகாலை இந்த சேவைகள் சரியாகின. உலகம் முழுக்க சுமார் 7 மணிநேரம் இதன் சேவைகள் முடங்கி, பின் செயல்பாட்டுக்கு வந்தது.
பேஸ்புக் நிறுவனத்துக்குச் சொந்தமான பிரபல சமூக வலைதள சேவைகளான பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் மூன்றுமே தொழில்நுட்ப கோளாற்றால் செயலிழந்தன. தடைப்பட்ட இந்த சேவைகளால் அதன் பயனாளர்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டனர். இதன் விளைவாக பேஸ்புக் நிறுவனர் மற்றும் CEO மார்க் சக்கர்பெர்க்கின் சொத்து மதிப்பு பெரும் சரிவைச் சந்தித்திருக்கிறது.
நேற்று இந்த சேவைகள் தடைப்பட்ட சில மணிநேரங்களில் அவரது சொத்துமதிப்பு சுமார் 7 பில்லியன் டொலர் அளவில் சரிந்திருக்கிறது. 7 மணிநேர முடக்கத்தால் பேஸ்புக் நிறுவன பங்குகள் பங்குச்சந்தையில் கடுமையாக வீழ்ச்சியடைந்தது. அமெரிக்காவின் நோஸ்ட்காம் பங்குச்சந்தையில் இந்நிறுவன பங்குகள் 7 சதவீதம் வரை வீழ்ச்சி அடைந்தது. இதன் காரணமாக பேஸ்புக் நிறுவனத்துக்கு 700 கோடி டொலர்கள் அதாவது இந்திய மதிப்பில் ரூ.52 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டது.
இதன் விளைவாக உலக பணக்காரர்கள் பட்டியலில் ஐந்தாவது இடத்திற்கு இறங்கி, பில் கேட்ஸுக்கு பின் சென்றிருக்கிறார் மார்க். இப்போது அவரது சொத்து மதிப்பு சுமார் 120 பில்லியன் டொலர்களாக இருக்கிறது. சில வாரங்களுக்கு முன்புதான் அவரது சொத்து மதிப்பு 140 பில்லியன் டொலர்களாக இருந்தது குறிப்பிடத்தக்கது. பேஸ்புக் நிறுவனத்தின் மதிப்பும் நேற்று சுமார் 5% சரிந்திருக்கிறது. ஒரு மாதத்தில் பேஸ்புக்கின் மதிப்பு சுமார் 15% சரிந்திருக்கிறது.
நேற்றைய சரிவுக்கு தொழில்நுட்ப கோளாறு மட்டும் காரணம் கிடையாது. பேஸ்புக்கின் ‘Civic Integrity Unit’-ல் பணிபுரிந்த முன்னாள் ஊழியர் பிரான்செஸ் ஹவ்கென் அமெரிக்கத் தொலைக்காட்சி ஒன்றுக்குக் கொடுத்த பேட்டியும் பேஸ்புக்கிற்கு பெரும் பின்னடைவாக அமைந்தது. ”நீங்கள் நினைப்பதை விட மோசமான விடயங்கள் பேஸ்புக்கில் நடக்கின்றன” என அவர் அளித்த பேட்டியில் லாபத்திற்காக வெறுப்புணர்வைத் தூண்டும் பதிவுகளையும், போலி செய்திகளையும் தெரிந்தே கண்டுகொள்ளாமல் பேஸ்புக் இருப்பதாக அவர் குற்றம்சாட்டினார்.
ஏற்கனவே பேஸ்புக்கின் இந்த போக்கை உறுதிப்படுத்தும் ஆதாரங்களை அவர் வெளியிட்டிருந்தார். பேஸ்புக் இதை மறுத்தாலும் அதன் நம்பகத்தன்மையின் மீது இன்னும் பல கேள்விகள் இதனால் எழுந்திருக்கின்றன. அமெரிக்க அரசும் இது குறித்து விசாரிக்க முடிவெடுத்துள்ளதாகத் தெரிகிறது.
“பிறருடன் தொடர்பில் இருப்பதற்கு எங்கள் சேவைகளை நீங்கள் எவ்வளவு நம்பியிருக்கிறீர்கள் என்பது எனக்குத் தெரியும். இன்று நடந்த கோளாற்றுக்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்” என நேற்றைய தொழில்நுட்ப கோளாறுக்கு தனிப்பட்ட முறையில் பயனாளர்களிடம் மன்னிப்பு கேட்டிருக்கிறார் மார்க்.
இந்நிலையில்பேஸ்புக் இல்லாத நேற்றைய இரவு நிம்மதியாக இருந்ததாக பலர சமூக வலைத்தளங்களில் கருத்து பதிவிட்டு வருகின்றனர். பலர் நிம்மதியா நேரத்துக்கு தூங்கியதாகவும் கூறுகின்றனர். அதேநேரம் பலர் பித்து பிடித்து போன மனநிலையில் இருந்தனர் என்பதும் உண்மையே.
குடும்பம், உறவுகள், அன்பு என்பது சமூகலைத்தளங்களினால் முற்றாக இல்லாது போய்விட்டது என்று கூறமுடியாது. ஆனால், நாம் நம் அருகில் இருப்பவர்களை தொலைத்து சமூகவலைத்தளங்களில் மூழ்கி மீள பெற முடியாத சின்ன சந்தோஷங்களை தொலைத்து விட்டிருக்கிறோம் என்பதே உண்மை. அம்மா மீது அன்பு காட்டாத பிள்ளைகள் அன்னையர் தினத்தில் மட்டும் பேஸ்புக்கில் புகைப்படங்கள் பதிவிட்டு அம்மாவை மற்றவர்களுகாக வாழ்த்துவதை பார்க்கிறோம்.
இந்த போலிகள்தான் மோசமானது. உண்மையில் சமூகலைத்தளங்கள் மூலம் ஆராக்கியமான விடயங்களை அனுபவிக்கலாம். அதனை மட்டும் செய்வோம். அது நமது வாழ்க்கையில் ஒரு துளி மட்டுமே. அது நமது வாழ்க்கை அல்ல என்பது நேற்றைய தினம் பலருக்கு புரிந்திருக்கும். உண்மையும் அதுவே.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]