ஹைதராபாத் அணிக்கு எதிரான நேற்றைய ஐ.பி.எல். போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 6 விக்கெட்டுகளினால் வெற்றி பெற்றுள்ளது.
2021 இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் நேற்றிரவு டுபாயில் நடைபெற்ற 49 ஆவது போட்டியில் கேன் வில்லியம்சன் தலைமையிலான சன் ரைஸர்ஸ் ஹைதராபாத் – இயன் மோர்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதின.
போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஹைதராபாத் முதலில் துடுப்பெடுத்தாடி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகளை இழந்து 115 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.
அணி சார்பில் கேன் வில்லியம்சன் 26 ஓட்டங்களையும், ப்ரியம் கார்க் 21 ஓட்டங்களையும், அப்துல் சமட் 25 ஓட்டங்களையும் அதிகபடியாக பெற்றனர்.
116 என்ற இலகுவான வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய கொல்கத்தா, 19.4 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுகளை இழந்து, 119 ஓட்டங்களை பெற்று, வெற்றியிலக்கை கடந்தது.
அணி சார்பில் அதிகபடியாக சுப்மன் கில் 57 ஓட்டங்களையும், நிதிஷ் ராணா 25 ஓட்டங்களையும் பெற்றனர்.
இந்த வெற்றியின் மூலம் கொல்கத்தா 12 புள்ளிகளை பெற்று பட்டியலில் தனக்கான நான்காம் இடத்தை தொடர்ந்தும் தக்க வைத்துக் கொண்டுள்ளது.
இதேவேளை நேற்று மாலை சார்ஜாவில் நடைபெற்ற 48 ஆவது லீக் ஆட்டத்தில் விராட் கோஹ்லி தலைமையிலான ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு – கே.எல்.ராகுல் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணிகளும் மோதின.
முதலில் துடுப்பெடுத்தாடிய பெங்களூரு அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகளை இழந்து 164 ஓட்டங்களை குவித்தது.
அணி சார்பில் அதிகபடியாக மெக்ஸ்வெல் 33 பந்துகளில் 4 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் அடங்கலாக 57 ஓட்டங்களையும், தேவதூத் படிக்கல் 38 பந்துகளில் 40 ஓட்டங்களையும் பெற்றனர்.
165 என்ற இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் அணியினரால் 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகளை இழந்து 158 ஓட்டங்களை மாத்திரமே பெற முடிந்தது.
இதனால் பெங்களூரு அணி 6 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது.
பிளே-ஆஃப் சுற்றுக்கு சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கெப்பிட்டல்ஸ் ஆகிய அணிகள் முன்னதாகவே தகுதி பெற்றிருந்தன.
இந் நிலையில் பிளே-ஆஃப் சுற்றுக்கு நான்காவது அணியாக வரப் போவது யார் என்பதை தீர்மானிப்பதற்கு ஏனைய அணிகள் முட்டி மோதுகின்றன.
இதேவேளை இன்றிரவு டுபாயில் ஆரம்பமாகும் 50 ஆவது லீக் ஆட்டத்தில் சென்னை – டெல்லி அணிகள் மோதவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
Photo Credit ; IPL2021
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]