ஹர்ஷல் படேலின் ஹெட்ரிக் சாதனையுடன் மும்பை அணிக்கு எதிரான போட்டியில் 54 ஓட்டங்களினால் பெங்களூரு வெற்றி பெற்றுள்ளது.
2021 ஐ.பி.எல். தொடரில் நேற்றிரவு டுபாயில் நடைபெற்ற 39 ஆவது லீக் ஆட்டத்தில், விராட் கோஹ்லி தலைமையிலான ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூருவும், ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸும் மோதின.
போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற மும்பை அணி முதலில் துடுப்பெடுத்தாடும் வாய்ப்பினை பெங்களூருவுக்கு வழங்கியது.
முதலில் துடுப்பெடுத்தாட ஆரம்பித்த பெங்களூரு, இரண்டாவது ஓவரின் நான்காவது பந்து வீச்சிலேயே தனது முதல் விக்கெட்டை பறிகொடுத்தது
அதன்படி தேவ்தூத் படிக்கல் எதுவித ஓட்டமின்றி பும்ராவின் பந்து வீச்சில் விக்கெட் காப்பாளரான டிகொக்கிடம் பிடிகொடுத்து வெளியேறினார்.
இரண்டாவது விக்கெட்டுக்காக கைகோர்த்த விராட் கோஹ்லி – ஸ்ரீகர் பாரத் ஆகியோரின் இணைப்பாட்டம் அணியின் ஓட்ட எண்ணிக்கையை வேகமாக அதிகரிக்கச் செய்தது.
அதனால் 8 ஓவர்களின் நிறைவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 63 ஓட்டங்களை குவித்தது பெங்களூரு.
பின்னர் 8.5 ஆவது ஒவரில் ஸ்ரீகர் பாரத் 32 (24) ஒட்டங்களுடன், ராகுல் சஹாரின் பந்து வீச்சில் சூர்யகுமார் யாதவிடம் பிடிகொடுத்துச் சென்றார்.
தொடர்ந்து களமிறங்கிய மெக்ஸ்வெல்லுடன் கைகோர்த்த விராட் கோஹ்லி 14.1 ஆவது ஓவரில் அரைசதம் கடந்தார்.
எனினும் அவர 15.5 ஆவது ஓவரில் மொததமாக 42 பந்துகளை எதிர்கொண்டு 3 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் அடங்கலாக 51 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.
ஒரு கட்டத்தில் பெங்களூரு அணி 16 ஓவர்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து, 126 ஓட்டங்களை பெற்றிருந்தது.
எனினும் 17 மற்றும் 18 ஆவது ஓவர்களை மெக்ஸ்வெல் மற்றும் டிவில்லியர்ஸ் ஜோடியினர் எதிர்கொண்டபோது அதிரடியான அனல் பறந்த ஆட்டங்களை வெளிப்படுத்தினர்.
அந்த இரு ஓவர்களில் மாத்திரம் 30 ஓட்டங்கள் பெறப்பட, அணியின் ஓட்ட எண்ணிக்கையும் 18 ஓவர்கள் நிறைவில் 156 ஆக உயர்ந்தது.
இந் நிலையில் 19 ஆவது ஓவருக்காக பந்துப் பரிமாற்றம் மேற்கொண்ட பும்ரா மெக்ஸ்வெல்லையும், டிவில்லியர்ஸையும் அடுத்தடுத்து ஆட்டமிழக்கச் செய்து வெளியேற்றினார்.
மெக்ஸ்வெல் 37 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகள் அடங்கலாக 56 ஓட்டங்களுடனும், டிவில்லியர்ஸ் 6 பந்துகளில் ஒரு சிக்ஸர், ஒரு பவுண்டரி அடங்கலாக 11 ஓட்டங்களை பெற்று ஆட்டமிந்தனர்.
இதனால் பெங்களூரு அணியின் வேகம் குறைவடைந்தது.
இறுதியாக 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட் இழப்புக்கு 165 ஓட்டங்களை பெற்றது பெங்களூரு.
166 ஓட்டம் என்ற வெற்றியிலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மும்பை அணியின் ஆரம்ப வீரர்களான ரோகித் சர்மாவும், டிகொக்கும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
இதனால் பவர் – பிளேயின் முதல் ஆறு ஓவர்கள் நிறைவில் விக்கெட் இழப்பின்றி 56 ஓட்டங்களை பெற்றது மும்பை.
அதன் பின்னர் 6.4 ஆவது ஓவரில் டிகொக் 24 ஓட்டங்களில் ஆட்டமிழக்க, 79.2 ஆவது ஒவரில் ரோகித் சர்மா 43 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.
இவர்களின் வெளியேற்றங்களை அடுத்து மும்பை அணியின் விக்கெட்டுகள் அடுத்தடுத்து தகர்த்து எறியப்பட்டன.
குறிப்பாக 17 ஆவது ஓவருக்காக பந்துப் பரிமாற்றம் மேற்கொண்ட ஹர்ஷல் படேல் ஹர்த்திக் பாண்டியா, பொல்லார்ட் மற்றும் ராகுல் சஹார் ஆகியோரை தொடர்ச்சியாக ஆட்டமிழக்கச் செய்து ஹெட்ரிக் சாதனை படைத்தார்.
இறுதியாக மும்பை அணி 18.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 111 ஓட்டங்களை மாத்திரம் பெற்று, 56 ஓட்டங்களினால் தோல்வியை சந்தித்தது.
பந்து வீச்சில் பெங்களூரு அணி சார்பில் ஹர்சல் படேல் 4 விக்கெட்டுகளையும், சாஹல் 3 விக்கெட்டுகளையும், மெக்ஸ்வெல் 2 விக்கெட்டுகளையும், மொஹமட் சிராஜ் ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
இதேவேளை அபுதாபயில் நேற்று மாலை இடம்பெற்ற 38 ஆவது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் இறுதிப் பந்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தியது.
முதலில் துடுப்பெடுத்தாடிய கொல்கத்தா 20 ஓவர்கள் நிறைவுக்கு 171 ஓட்டங்களை குவித்தது. பின்னர் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய சென்னை அணி 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகளை இழந்து 172 ஓட்டங்களை பெற்று வெற்றிபெற்றது.
19 ஆவது ஓவரை எதிர்கொண்ட ரவீந்திர ஜடேஜாவின் வெறியாட்டம் சென்னையின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது. அந்த ஓவரில் அவர் 2 சிக்ஸர்களையும், 2 பவுண்டரிகளையும் அடுத்தடுத்து விளாசித் தள்ளினார்.
இது இவ்வாறிருக்க இன்றிரவு டுபாயில் நடைபெறவுள்ள 40 ஆவது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியும் மோதவுள்ளன.
Photo Credit ; IPL
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]