நம்நாட்டுக் கலைஞர்களை நாம் கொண்டாட வேண்டும் என்பதை காலம் உரத்துப் பதிவு செய்கிறது. அத்துடன் அவர்கள் திறமையிலும் ஆளுமையிலும் சளைத்தவர்களில்லை என்பதை இன்றைய காலம் உணர்த்திச் செல்கிறது.
தற்போது கோவிட் 19 தொற்றுக் காலத்தில் முற்று முழுதாக இந்திய – தமிழ் நாட்டுக் கலைஞர்களின் வெளிநாட்டுப் பயணங்கள் தடைப்பட்டுள்ளன. உலகில் கலையில் முன்னணி வகிக்கும் நாடு இந்தியா. அத்துடன் நமது பொழுது போக்கில் தமிழ் நாட்டுத் திரைக்கலைக்கு முக்கிய இடம் உண்டு.
அவற்றை மறுப்பதற்கில்லை. அத்துடன் நாம் கலைவழியாகவும் ஈழம் – தமிழ்நாடு இடையே அறுபடாத் தொடர்பைக் கொண்டுள்ளோம். வரலாறு முழுவதும் ஈழத்திற்கும் தமிழகத்திற்குமான கலைப்பயணம் தொரடர்கிறது. அது இன்று புலம்பெயர் மண்ணிலும் நிகழ்கிறது.
இந்த நிலையில் ஈழ மண்ணிலிருந்து இந்திய தேசமே வியக்கின்ற கலைஞர்களும் உருவாகியுள்ளார்கள். இந்திய திரையுலகம் கொண்டாடுகின்ற சினிமா ஜாம்பவான் பாலு மகேந்திரா ஈழத்தின் மட்டக்களப்பு மண்ணில் இருந்தே சென்றவர் என்பது நமக்கு எத்தகைய பெருமையை தருகிறது?
எனவே, நாம் ஈழக் கலைஞர்களை வளர்க்க வேண்டும். அவர்கள் உலக அளவில் பேசப்படுகின்ற ஆளுமைகளாக மாறக்கூடும். அதற்கான வழிகளை திறப்பது நமது கடமையல்லவா? இன்றைக்கு புலம்பெயர் தேச கலை நிகழ்வுகளில் இந்திய – தமிழக பிரபலங்கள் கலந்து கொள்ள முடியாத நிலையில் அந்த இடத்தை ஈழக் கலைஞர்களே நிரப்புகின்றனர்.
எனவே நம் நாட்டுக் கலையையும் நம் நாட்டின் கலைஞர்களையும் நாம் பெருமைப்படுத்த வேண்டும் என்பதை இன்றைய காலம் படிப்பினையாக நமக்கு உணர்த்துகின்றது. கலை வழியாகவும் நாம் சாதனைகளையும் நிறைவையும் எட்டுகின்ற போதே ஒரு தேசமாக நிமிர்ந்தெழ முடியும் என்பது என் அசையா நம்பிக்கை.
நன்றி
கிருபா கிசான்