கவிஞரும், எழுத்தாளரும், திரைப்பட பாடலாசிரியருமான ஃபிரான்சிஸ் கிருபா உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். அவரது மறைவுக்கு கவிஞர்களும், எழுத்தாளர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
ஜெ. பிரான்சிஸ் கிருபா (இறப்பு: செப்டம்பர் 16, 2021) ஒரு தமிழ் நவீன கவிதை எழுத்தாளர். இவர் திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி வட்டம், மூன்றடைப்பு, பத்தினிப்பாறை கிராமத்தைச் சேர்ந்தவர். பள்ளிப்படிப்பே பயின்றுள்ளார்.
இவர் கவிதை, புதினம் எழுதியுள்ளார். மல்லிகைக்கிழமைகள், ஏழுவால் நட்சத்திரம் எனும் கவிதை நூல்களை எழுதியுள்ளார். இவர் எழுதிய கன்னி எனும் புதினம் 2007 ஆம் ஆண்டில் ஆனந்த விகடனின் சிறந்த புதினம் எனும் வகைப்பாட்டில் விருது பெற்றுள்ளது. 2008 ஆம் ஆண்டுக்கான நெய்தல் இலக்கிய அமைப்பின் சுந்தர ராமசாமி விருது பெற்றவர்.
புதினம்
கன்னி
கவிதை தொகுப்புகள்
மல்லிகைக் கிழமைகள்
சம்மனசுக் காடு
ஏழுவால் நட்சத்திரம்
நிழலன்றி ஏதுமற்றவன்
மெசியாவின் காயங்கள்
வலியோடு முறியும் மின்னல்.
விருதுகள்
சுந்தரராமசாமி விருது – கவிதைக்கான விருது (2008)
சுஜாதா விருது – சம்மனசுக்காடு (2017)
மீரா விருத்
ஆனந்த விகடன் விருது
டி.கே. கலாப்பிரியா
“அண்ணாச்சி அக்கா, பிள்ளைகள் எல்லாம் நல்லாருக்காங்களா… நான் வருவேன் அண்ணாச்சி, எல்லாரையும் பாக்கணும்….” சமீபத்தில் இரண்டு முறை அதிகாலைப் பொழுதில் அழைத்தான். வழக்கம் போல ஒரு புதிய எண்ணிலிருந்து…ஒவ்வொரு முறையும் அதைச் சேமித்துக் கொள்வது போல இந்த முறை அந்த எண்ணை நான் சேமித்துக் கொள்ளவில்லை… இப்போது என்னவோ ஒரு குற்ற உணர்ச்சியாக இருக்கிறது. சேமித்திருந்தால் உயிருடன் இருந்திருப்பானோ ஃப்ரான்சிஸ் கிருபா
பழனிபாரதி
சக்தியின் கூத்தில்
ஒளியின் தாளம்
ஓய்ந்துவிட்டது…
வாழ்வை
மரணமாக
மரணத்தை
வாழ்வாக
உயிர்த்தெழும் சொற்களுக்காகவே
வாழ்ந்த பெருங்கவிஞன்
பிரான்சிஸ் கிருபாவுக்கு
ஆழ்ந்த அஞ்சலி….
லீனா மணிமேகலை
பாறையைத் தின்று பசியாறியவன் போய்விட்டான்
மனுஷ்யபுத்திரன்
கவிஞர் ஃப்ரான்சிஸ் கிருபா மறைந்தார். சொற்களின் உன்மத்தத்தால் தன்னைத்தானே அழித்துக்கொண்ட இன்னொரு கவிஞன். கடைசியாக அவரை நான் பார்த்தது கடந்த பிப்ரவரியில் நடந்த சென்னை புத்தகக் கண்காட்சியில் உயிர்மை அரங்கின் வாசலிருந்த என்னிடம் ‘ இதோ வந்துற்றேன்’ என்று சொல்லிவிட்டு எதிர்வரிசையில் மறைந்துபோன சித்திரம்தான். அஞ்சலிகள் என்று தெரிவித்துள்ளவர், கவிஞரின் மறைவை முன்னிட்டு இரண்டு கவிதைகள் படைத்திருக்கிறார்.
இறந்த கவிஞனை
எல்லோரும் ஒரே நாளில்
கூட்டமாக நினைத்து முடித்துவிடாதீர்கள்
அந்த இறந்த கவிஞன்
நானாகவே இருந்தாலும் சரி
தினம் ஒருவராக
அவனை நினைத்துக்கொண்டால்
அவன் மீது அன்பு செலுத்தினால்
மரணத்திற்குப் பிந்தைய வாழ்வை
அவன் தன்னம்பிக்கையுடன் எதிர்கொள்வான்
ஒரே நாளில் எல்லோரும் கூடிக் கலைந்துவிட்டால்
அவன் மிகவும் தனிமையை உணர்வான்
ஒரு கவிஞனுக்கு கிடைப்பதற்கரிய
நம் அனைவரின்
இப்போதைய அன்பு
அவனுக்குக் கிடைத்த
கடைசி மதுபாட்டில்
அவன் அதை பாதுகாத்து
தினம் தினம்
கொஞ்சம் கொஞ்சமாக
அருந்தவே விரும்புவான்
ஒரு நாளைக்கு
ஒரு துளியென
இன்னும் உயிருடன் இருக்கும்
கவிஞன் என்ற முறையில் சொல்கிறேன்
ஒரு கவிஞன் இறப்பதற்கு முன்
அவனது கவிதைகளை மேற்கோள் காட்டுவது நல்லது
அவனது தேவதைதன்மையை
எடுத்தியம்புவது நல்லது
அவனது புத்தகத்திற்கு
ஒரு மதிப்புரை எழுதுவது நல்லது
அவன் சாலையில் தவறி விழும்போது
ஒரு கைகொடுப்பது நல்லது
அவனைக் கைவிட்ட காதலிகள்
இரங்கல் குறிப்புகள் எழுத நேரும்முன்
ஒரு அன்பின் மலரை அனுப்புவது நல்லது
அவனைப்பற்றிய இனிய நினைவுகளை
அவனிடமே சொல்வது நல்லது
இலக்கிய விமர்சகர்கள்
அவனே படித்தறியும்படி
அவனது பெயரை பட்டியலில் சேர்ப்பது நல்லது
கவிஞர்கள் எந்த நேரத்தில்
இறப்பார்கள் என்று சொல்லமுடியாது
அவர்களுக்கு மிக இளம்வயதிலேயே
அதிகப்படியான
அவமானங்கள் சேர்ந்துவிடுகின்றன
மேலும் அசலான கவிஞன் என்பவன்
ஒரு கையால் வாழ்வுக்கு போராடிக்கொண்டே
மறு கையால்
தன் சவப்பெட்டியின் ஆணியை
தானே அடித்துக்கொண்டிருப்பவன்தானே
கவிஞர்கள் ஒரு சாகசம்போல இறப்பதில்லை
வேறு வழியில்லாமல்தான் இறக்கிறார்கள்
இறக்கும் கவிஞர்களின் தலைமாட்டில்
யாரோ இரண்டுபேர்தான்
எப்போதும் அமர்ந்திருக்கிறார்கள்
அவர்கள் கவிதையின் உபாசகர்களாக
இல்லாவிட்டாலும்கூட
கவிஞனை தனியே சாகவிடக்கூடாது
என்று நம்புகிறார்கள்
இறந்துவிட்ட ஒரு கவிஞனுக்கு
நாம் செய்யும் பலவற்றில்
ஒன்றிரண்டையேனும்
உயிருள்ள கவிஞர்களுக்கும் செய்யலாம்
அதன் வழியே
அவனது மரணத்தை
ஒரு நாள்
ஒரே ஒரு நாள்
நாம் தள்ளிவைக்கக்கூடும்
தமிழ்நதி
கவிஞர்/நாவலாசிரியர் பிரான்ஸிஸ் கிருபா மறைந்துவிட்டார். அவரோடு எனக்கு நேர்முகப் பரிச்சயம் அவ்வளவாக இல்லை. இரண்டு தடவைகள் சென்னை புத்தகக் கண்காட்சியில் அவரைப் பார்த்தேன். இரண்டு சந்திப்புகளுமே ‘தமிழினி’ ஸ்டாலி ல் நிகழ்ந்தவைதான். முதற்றரம், அவரைக் கண்டதும், “கன்னி அரைவாசிதான் வாசித்துள்ளேன். வாசித்து முடிக்கவேணும்” என்றேன். “அரைவாசி…..?” என்ற வார்த்தையில் ஒருகணம் நின்றார். பெரிதாகச் சிரித்தார். “முழுவதும் வாசித்துவிட்டுச் சொல்லுங்கள்” என்றார்.
பிறகொருநாள், ‘தமிழினி’ஸ்டாலில், வசந்தகுமார் அவர்களிடம் பணம் வாங்கியபின் அவசரமாக வெளியேறிக்கொண்டிருந்த அவரைக் கண்டேன் “எப்படி இருக்கிறீர்கள் தமிழ்நதி?” என்றார். நான் பதில் சொல்லி முடித்தவுடன் பரபரத்த கண்களுடன் வெளியேறிவிட்டார்.
பிற்பாடு, அவ்வப்போது தொலைவிலிருந்து அவரைக் கண்டிருக்கிறேன். காணும்போதெல்லாம் ‘அந்தரித்து அலையும் நல்லாத்மா’ என எண்ணிக்கொள்வேன். ஒவ்வொரு தடவை காணும்போதும், முந்தைய தடவை கண்டதைவிட தோற்றச் சிதைவை அவதானிக்க முடிந்தது.
‘கன்னி’ நாவல் ஒரு நெடுங்கவிதை. அவரது மறைவின்பின், “அவர் அப்படி இருந்திருக்கலாம்; இப்படி வாழ்ந்திருக்கலாம்” என்றெல்லாம் நான் அதிகப்பிரசங்கித்தனம் பண்ணப் போவதில்லை. அவர், தான் விரும்பியவாறே வாழ்ந்தார்; மறைந்தார்.
நூறு ஆண்டுகள் ஒருவர் ஆரோக்கியமாக வாழ்ந்தாலும், ‘கன்னி’போன்றதொரு நாவலையோ பிரான்சிஸ் கிருபாவால் எழுதப்பட்ட அதியற்புதமான கவிதைகளையோ எழுதிவிட இயலாது. கவித்துவத்திற்கும் பித்து நிலைக்குமான தொடர்பு பற்றி பலரும் எழுதியுள்ளார்கள். பிரான்ஸிஸ் கிருபா பற்றி நானறிந்ததன் அடிப்படையில், அவரது மரணம், அவரால் வரிக்கப்பட்ட அல்லலுற்ற வாழ்விலிருந்து அவரடைந்த விடுதலை என்றே எண்ணுகிறேன்.
இப்படித்தான் மகாகவிகளெல்லோரும் சடுதியாக மறைந்துபோகிறார்கள். ‘எழுத்தில் நீங்கள் இருக்கிறீர்கள்’ என்ற தேய்ந்த அஞ்சலியை உங்களுக்கும் சொல்கிறேன் கிருபா.
‘கன்னி’ நாவலை இதுவரை வாசித்திராதவர்கள் தயவுசெய்து இனியாகுதல் வாசியுங்கள். தமிழில் வெளியான மகத்தான நாவல் அது. மறைந்த கவிஞனுக்கு, மனஞ்சோர்ந்த அஞ்சலி.
வ.கீரா
நண்பன் பிரான்சிஸ் கிருபா மறைந்தான்….
எதை பேசுவது..எதை விடுவது எனத் தெரியவில்லை….
பின்நவீனத்துவ காலக் கோட்பாட்டரசில் உன்னை தின்று விட்டது…
உன் தனிமையை அதுதான் ஏமாற்றி விட்டது….
பெரும்பணக்காரர்கள் பின்நவினத்துவ புடுங்கிகளாக இருப்பார்கள்…
அவர்கள் உன்னையும் உன் நலத்தையும் சேர்த்து திருடியிருப்பார்கள்….
உன்னிடம் வெளிப்பட்ட உள்ளார்ந்த அனைத்தும் ….
நீ ஓய்வெடு…
உன்னை..
நீயோ…
அல்லது
உனது மனமோ
உன்னை பாடாற்றியவர்களோ செதுக்கியிருப்ப்பார்கள்…
பலரை பலி கொண்ட
அவ்வலியை எப்பிடி சொல்வது.,.