விநாயகருக்கு இந்தியா முழுவதுமே பல திருக்கோவில்கள் அமைந்துள்ளன. அந்த வகையில் இந்தியாவில் உள்ள புகழ்பெற்ற விநாயகர் கோவில்களில் சிலவற்றை இங்கே பார்ப்போம்.
விநாயகருக்கு இந்தியா முழுவதுமே பல திருக்கோவில்கள் அமைந்துள்ளன. ஏன் ஒவ்வொரு தெருக்களிலும் கூட விநாயகர் சிலை வைத்து வழிபாடு செய்வதை நாம் பார்த்திருக்கிறோம். அந்த வகையில் இந்தியாவில் உள்ள புகழ்பெற்ற விநாயகர் கோவில்களில் சிலவற்றை இங்கே பார்ப்போம்.
சாசிவேகாலு கணேசா
கர்நாடகா மாநிலத்தின் சரித்திர புகழ்பெற்ற இடம் ஹம்பி நகரம். இங்குள்ள ஹேமகூட மலையின் அடிவாரத்தில்தான் ‘சாசிவேகாலு கணேசா’ கோவில் அமைந்துள்ளது. இங்குள்ள விநாயகர் சிலையானது, கடுகுகளினால் பூசப்பட்டதுபோல் காட்சியளிப்பதால் இந்தப் பெயர் வந்துள்ளது. இத்தல விநாயகர் தன்னுடைய வயிற்றில் பாம்பு ஒன்றை இறுக்கி கட்டிய நிலையில் காட்சி தருகிறார். 8 அடி உயரம் உள்ள இந்த விநாயகர், ஒரே கல்லில் செதுக்கப்பட்டவர்.
தொட்ட கணபதி
பெங்களூருவில் உள்ள பசவனகுடி என்ற பகுதியில்தான் இந்த தொட்ட கணபதி ஆலயம் அமைந்திருக்கிறது. இங்குள்ள விநாயகர் சிலை ஒற்றைப் பாறையை குடைந்து உருவாக்கப்பட்டதாகும். 18 அடி உயரம், 16 அடி அகலத்துடன் வெகு பிரமாண்டமாக காட்சியளிக்கிறார் இந்த விநாயகர். இதனாலேயே இவரை தொட்ட (மிகப்பெரிய) கணபதி என்று அழைக்கிறார்கள்.
தக்டுசேட் கணபதி
மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள புகழ்பெற்ற விநாயகர் கோவில்தான், தக்டுசேட் கணபதி ஆலயம். திருப்பதி வெங்கடாஜலபதியைப் போல, இத்தல விநாயகரும் ‘பணக்கார விநாயகர்’ என்றே அழைக்கப்படுகிறார். ஏனெனில் இந்த கோவிலில் உள்ள விநாயகர் சிலை ரூ.1 கோடிக்கு காப்பீடு செய்யப்பட்டிருக்கிறது.
உச்சிப்பிள்ளையார்
திருச்சியில் உள்ள மலைக்கோட்டை, 3 பில்லியன் ஆண்டுகள் பழமை வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த மலையின் உச்சியில் அமைந்த காரணத்தால், இங்குள்ள விநாயகர் ‘உச்சிப் பிள்ளையார்’ என்று அழைக்கப்படுகிறார். இந்தக் கோவில் பணி பல்லவர்கள் காலத்தில் தொடங்கப்பட்டு, 7-ம் நூற்றாண்டில் மதுரை நாயக்க மன்னர்களால் முடிக்கப்பட்டுள்ளது. தரை மட்டத்தில் இருந்து 273 அடி உயரத்தில் அமைந்த இந்தக் கோவிலை அடைய, 437 படிகள் ஏறிச்செல்ல வேண்டும்.
சித்தி விநாயக் மந்திர்
மும்பையின் புகழ்பெற்ற திருக்கோவில்களில் ஒன்று இது. 1801-ம் ஆண்டு இந்த ஆலயம் கட்டப்பட்டள்ளது. முன் காலத்தில் சிறிய செங்கல் கட்டிடமாக இருந்த இந்த ஆலயம், தற்போது புனரமைக்கப்பட்டு, பார்க்கவே பிரமாண்ட தோற்றம் தரும் வகையில் மாற்றப்பட்டுள்ளது.
மணக்குள விநாயகர்
புதுச்சேரியில் 1666-ம் ஆண்டிலேயே இந்தக் கோவில் கட்டப்பட்டிருக்கிறது. இந்த கோவில் அமைந்திருக்கும் பகுதியில் முன்பு எங்கும் மணல் பரந்து கிடந்ததோடு, அருகே ஒரு குளமும் இருந்ததால் இது ‘மணக்குள விநாயகர்’ என்ற பெயரை பெற்றது.
சுயம்பு கணபதி
மகாராஷ்டிரா மாநிலத்தின் கணபதிபுலே நகரில் கடற்கரைப் பகுதியில் இந்தக் கோவில் இருக்கிறது. இங்குள்ள விநாயகர் சிலை, மணற்பாறையில் தானாகவே உருவானது. இதனாலேயே இதனை ‘சுயம்பு கணபதி’ என்கிறார்கள். இந்த சுயம்பு விநாயகரைத் தவிர, சிங்கத்தின் மீது காட்சியளிக்கும் தாமிரத்தால் செய்யப்பட்ட விநாயகர் சிலையும் இந்த ஆலயத்தில் உள்ளது.
கொட்டாரக்கரா மகாகணபதி
கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் உள்ள சிறிய நகரம்தான் கொட்டாரக்கரா. இங்கு மகா கணபதி ஆலயம் உள்ளது. முன் காலத்தில் இந்தக் கோவில் இங்கு முதன்மை தெய்வமாக இருக்கும் சிவனின் பெயரிலேயே அழைக்கப்பட்டு வந்துள்ளது. நாளடைவில் இங்குள்ள கணபதியின் புகழ் பரவத் தொடங்கியதால், இப்போது கணபதியில் பெயரிலேயே கோவில் வழங்கப்படுகிறது. இங்கு சிவன், விநாயகர் தவிர, பார்வதி, முருகன், ஐயப்பன் ஆகியோருக்கும் சன்னிதிகள் உள்ளன.