ஆப்கானிஸ்தானில் பெண்கள் கல்விக்கான புதிய கட்டுப்பாடுகளை தலிபானின் கல்வி அமைச்சர் அப்துல் பாக்கி ஹக்கானி ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர் சந்திப்பில் அறிவித்தார்.
தலிபான்களின் எழுச்சி, 20 ஆண்டுகளுக்கு முன்னர் ஆப்கானிஸ்தானில் நிலவிய கொடூரமான ஆட்சி நிலைக்கு நாடு மீண்டும் திரும்புமா என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதில் பெண்கள் மற்றும் பெண்களுக்கான கல்வி மறுப்பு, பொது வாழ்வில் இருந்து விலக்குதல் ஆகியவையும் அடங்கும்.
இந் நிலையில் ஞாயிற்றுக்கிழமை ஆப்கானிஸ்தானில் பெண்கள் கல்விக்கான புதிய கட்டுப்பாடுகளை அறிவித்த தலிபானின் கல்வி அமைச்சர்,
பெண்கள் முதுகலை பட்டப்படிப்பு உட்பட பல்கலைக்கழகங்களில் தொடர்ந்து படிக்கலாம், ஆனால் வகுப்பறைகள் பாலினமாக பிரிக்கப்பட்டு தலையினை மறைக்கும் வகையிலான ஹிஜாப்கள் கட்டாயமாக்கப்படும்.
பெண் மாணவர்களுக்கு பெண் ஆசிரியர்களினால் கற்பிக்கப்படும். அதற்காக எங்களிடம் அதிக எண்ணிக்கையிலான பெண் ஆசிரியர்கள் உள்ளனர். இதில் நாங்கள் எந்த சில்கல்களையும் எதிர்கொள்ள மாட்டோம் என்று கூறினார்.
1996 மற்றும் 2001 க்கு இடையில் தலிபான் ஆட்சியின் கீழ் பாடசாலை மற்றும் பல்கலைக்கழகங்களில் பெண்கள் கற்றல் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு தடைவிதிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.