குடும்பத்தோடு தற்கொலைக்கு முயன்றோம்! தங்கம் வென்ற மாரியப்பனின் தாயார் கூறிய அதிர்ச்சி தகவல்
ரியோ நகரில் நடைபெற்று வரும் பாரா ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியாவின் மாரியப்பன் தங்கவேலு உயரம் தாண்டுதல் போட்டியில் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
தனது 5வது வயதில் ஏற்பட்ட லாரி விபத்தில் மாரியப்பன் தனது வலது காலை இழந்தார். இருப்பினும் முடங்கி விடாமல் தற்போது தங்கம் வென்று சரித்திரம் படைத்திருக்கிறார்.
இந்த நிலையில் வறுமை காரணமாக குடும்பத்தோடு தற்கொலைக்கு முயன்றதாக மாரியப்பனின் தாயார் அதிர்ச்சி தகவலை கூறியுள்ளார்.
இது தொடர்பாக மாரியப்பன் தாயார் சரோஜா கூறுகையில், எனக்கு ஒரு மகளும், 3 மகன்களும் உள்ளனர்.
இந்த நிலையில் எனது மூத்த மகன் மாரியப்பனுக்கு 5 வயது இருக்கும் போது நடந்த விபத்தில் வலது கால் பாதம் முழுவதும் சேதமடைந்து விட்டது.
உடனடியாக அரசு மருத்துவமனையில் சேர்த்து குணமாக்கினோம். வடகம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் பயின்ற போது தன்னை யாரும் விளையாட சேர்த்துக் கொள்ளவில்லை என்று மாரியப்பன் வருத்தினார்.
பின்னர் அவரது விளையாட்டு ஆர்வத்தை பார்த்த ஆசியர்கள் அவரை உயரம் தாண்டுதலில் ஊக்குவித்தனர்.
மாரியப்பன் சிறுவனாக இருந்த போதே அவரது தந்தை பிரிந்து சென்றுவிட்டார். குடும்ப வறுமையை தாங்கிக் கொள்ள முடியாமல் நாங்கள் தற்கொலை செய்ய முயன்றோம். ஆனால் எங்களை தடுத்து நிறுத்திய மாரியப்பன் வறுமை சூழல் ஒருநாள் கண்டிப்பாக மாறும் என்று தேற்றினார்.
அவர் தான் பள்ளி விடுமுறை நாட்களில் கூலிவேலைக்கு சென்று அதன் மூலம் தனக்கான செலவையும் குடும்பத்திற்கும் வழங்கினார் என்று கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.