ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை, இலங்கையின் மோசமான மனித உரிமைகள் நிலைமையை கடுமையாக ஆய்வு செய்து உண்மையான முன்னேற்றங்களுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
மனித உரிமைகள் கண்காணிப்பகம் இந்த வலியுறுத்தலை விடுத்துள்ளது.
2021, செப்டம்பர் 13 ஆம் திகதி ஆரம்பமாகும், பேரவையின் அமர்வில், உறுப்பு நாடுகள், துஷ்பிரயோகம் மற்றும் சுயாதீன அரசு நிறுவனங்கள், பொது நிர்வாகம் மற்றும் சட்டத்தின் பலவீனமான குற்றச்சாட்டுகள் குறித்து தமது எச்சரிக்கையை வெளிப்படுத்த வேண்டும் என்றும் சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் தனது அறிக்கை ஒன்றில் கோரியுள்ளது.
இலங்கை அரசாங்கம், சர்வதேச மனித உரிமை கடமைகளை நிறைவேற்ற, உறுப்பு நாடுகள் அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று கண்காணிப்பகத்தின் தெற்காசிய பணிப்பாளர் மீனாட்சி கங்குலி கோரியுள்ளார்.
2019 இல் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச பதவியேற்றதிலிருந்து, கடந்தகால கொடுமைகளை நிவர்த்தி செய்வதிலும், முறைகேடுகளை முடிவுக்குக் கொண்டுவருவதிலும் இலங்கை அடைந்திருந்த, வரையறுக்கப்பட்ட முன்னேற்றம் பேரழிவு தரும் வகையில் தலைகீழாக மாறியுள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை மீதான தொடர்ச்சியான சர்வதேச கவனமும் அழுத்தமும் சிறுபான்மை சமூகங்கள், ஆர்வலர்கள் மற்றும் செய்தியாளர்கள் எதிர்கொள்ளும் அபாயங்களைக் குறைக்க உதவும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.