டோக்கியோ 2020 ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் பங்குபற்றத் தவறியமைக்காக வட கொரியாவுக்கு சர்வதேச ஒலிம்பிக் குழுவினால் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தடை 2022 வரை நீடிப்பதால் பெய்ஜிங்கில் நடைபெறவுள்ள குளிர்கால ஒலிம்பிக்கில் வட கொரியாவுக்கு பங்குபற்ற முடியாது.
கொவிட் 19 தொற்று நோயிலிருந்து தனது போட்டியாளர்களைப் பாதுகாக்க வேண்டியுள்ளதெனத் தெரிவித்து டோக்கியோ 2020 ஒலிம்பிக் விளையாட்டு விழாவுக்கு தனது குழுவினரை வட கொரியா அனுப்பவில்லை.
இந்தத் தடைக்காலத்தின்போது எவ்வித நிதி உதவியும் வட கொரியாவுக்கு கிடைக்காது என சர்வதேச ஒலிம்பிக் குழுத் தலைவர் தோமஸ் பெச் தெரிவித்தார்.
பெய்ஜிங் 2022 குளிர்கால ஒலிம்பிக்கில் தனிப்பட்ட வட கொரியர்களின் பங்கேற்பு குறித்தும் வடகொரியாவுக்கு விதிக்கப்பட்ட தடைக்காலத்தை மறுபரிசீலனை செய்வது குறித்தும் தீர்மானிக்கும் உரிமை சர்வதேச ஒலிம்பிக் குழுவுக்கு இருப்பதாக தொமஸ் பெச் மேலும் தெரிவித்தார்.