அசாமில் பிரம்மபுத்திரா நிதியில் புதன்கிழமை மாலை இரண்டு பயணிகள் படகுகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதனால் குறைந்தது ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், சுமார் நான்கு பேர் காணாமல்போயுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அசாமின், ஜோர்ஹட் மாவட்டத்தில் உள்ள நிமதி காட் பகுதியில் இருந்து சுமார் 100 மீ தொலைவில் நேற்று மாலை 4.00 மணியளவில் பெரிய கப்பலும், சிறிய தனியார் படகொன்றும் நேருக்கு நேர் மோதியே இவ் விபத்து ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதனால் சுமார் 70 பயணிகளை ஏற்றிச் சென்ற சிறிய படகு உடனடியாக கவிழ்ந்துள்ளதுடன், விபத்தின்போது இரண்டு படகுகளிலும் 100 க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பில் அசாம் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் (ASDMA) தலைமை நிர்வாக அதிகாரி ஜி.டி திரிபாதி கூறுகையில்,
சம்பவம் நடந்த ஆறு மணி நேரத்திற்குப் பிறகு (இரவு 10 மணி வரை) கவிழ்ந்த படகில் இருந்த 43 பயணிகளை எங்களால் காப்பாற்ற முடிந்தது. மீட்கப்பட்டவர்களில் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்து விட்டார்.
விபத்தினால் அதிகளவானோர் நீரில் மூழ்கி உயிரிழந்திருக்கலாம் என்றும் 50 க்கும் மேற்பட்டோர் காணாமல் போனதாகவும் ஆரம்பகட்ட அறிக்கைகள் மதிப்பிட்டிருந்தன.
எனினும் மீட்பு படையினரின் தொடர் பேராட்டத்தினால் நேற்றிரவு பலர் மீட்கப்பட்டுள்ளனர்.
கவிழ்ந்த சிறிய படகில் சுமார் 67-68 பயணிகள் இருந்தனர்.
மீட்கப்பட்ட 43 பேரைத் தவிர, மற்ற 21 பயணிகளுடனான தொடர்புகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மஜூலியைச் சேர்ந்த நான்கு பேர் காணாமல் போனது உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே இன்னும் கண்டறியப்படாத 4-6 பயணிகள் இருக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
படகுகள் மாஜுலி மாவட்டம் கமலாபரி மற்றும் நிமதி காட் இடையே பயணிகளை ஏற்றிச் சென்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.