சுமார் 18 மாதங்களுக்கு பின்னர் இலங்கை கிரிக்கெட் அணியானது ஒருநாள் தொடர் ஒன்றை நேற்றைய தினம் வென்றுள்ளது.
இந்த வெற்றியானது இலங்கையின் புதுமுக வீரர்களுக்கு கிண்ணத்துடனான கொண்டாட்டங்களுக்கு வழிவகுத்துள்ளதுடன், 2023 உலகக் கிண்ண சூப்பர் லீக்கில் அவர்களுக்கு மிகவும் தேவையான சில புள்ளிகளையும் வழங்கியுள்ளது.
தொடர் தொடங்குவதற்கு முன்பு இலங்கை 2023 ஆண்களுக்காக உலகக் கிண்ண சூப்பர் லீக் பட்டியலில் 11 ஆவது இடத்தில் இருந்தது. தொடரின் முடிவில் 5 ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது.
நேற்றைய ஆட்டத்தில் இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடி 203 ஓட்டங்களை மாத்திரமே பெற்றனர். 204 என்ற இலகுவான வெற்றியலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணியினரால் 125 ஓட்டங்களை மாத்திரமே பெற முடிந்தது.
காரணம் இலங்கை அணி சுழற்பந்து வீச்சாளர்களின் வியூகங்கள் தான்.
இதனால் 30 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்த தென்னாபிரிக்காக 78 ஓட்டங்களினால் தோல்வியைத் தழுவ இலங்கை 2:1 கணக்கில் ஒருநாள் தொடரை கைப்பற்றயது.
போட்டியின் ஆட்டநாயகனாக துஷ்மந்த சமீரவும், தொடரின் ஆட்டநாயகனாக சரித் அசலங்காவும் தேர்வுசெய்யப்பட்டனர்.
மஹீஷ் தீக்ஷன
21 வயதான வலது கை சுழற்பந்து வீச்சாளர் மஹீஷ் தீக்ஷன, அறிமுகப் போட்டியிலேயே 37 ஓட்டங்களுக்கு நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இது இலங்கை அணியின் அறிமுக சுழற்பந்து வீச்சாளர் ஒருவர் நிகழ்த்திய சாதனையாகும்.
குறிப்பாக மஹீஷ் தீக்ஷன ஒருநாள் அரங்கில் தான் வீதிய முதல் பந்திலேயே விக்கெட்டினை எடுத்தார், அது மாத்திரமன்றி தனது 10 ஆவது ஓவரின் இறுதிப் பந்திலும் அவர் ஒரு விக்கெட்டினை எடுத்து அணிக்கான தனது பங்களிப்பினை நிறைவுசெய்தார்.
தென்னாபிரிக்க அணியின் துடுப்பாட்ட வீரர்கள் நேற்றைய ஆட்டத்தில் மஹீஷ் தீக்ஷனவின் கேரம் பந்துகளுக்கு தாக்குப் பிடிப்பதற்கு பெரும் போராட்டத்தினை எதிர்கொண்டனர்.
பெரும்பாலான தென்னாபிரிக்கா வீரர்களுக்கு அவரின் பந்து எந்த திசையில் திரும்பும் என்பதை கண்டறிய முடியவில்லை.